கிழக்கில் தமிழரை முதலமைச்சராக்குவதே எமது எதிர்கால அரசியல் புரட்சியின் வெற்றி | தினகரன்


கிழக்கில் தமிழரை முதலமைச்சராக்குவதே எமது எதிர்கால அரசியல் புரட்சியின் வெற்றி

திருமலையில் கருணா அம்மான் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே எமது அரசியல் புரட்சியாக உள்ளது. இதனாலே இம்முறை தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,...

தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க மக்கள் எம்மோடு இணைந்துள்ளார்கள். இதனால் திறம்பட பாராளுமன்ற அதிகாரத்தின் பின் எதிர்கால அரசியலை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும். இதனால் தனித்துவமாக களமிறங்கி தேர்தலின் பின் உறுதியான பேச்சுவார்த்தையின் பின் அரசுடன் கைகோர்ப்போம். திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நில அபகரிப்பு,தொல்பொருள் என்ற போர்வையில் வணக்கஸ்தலங்கள் அபகரிப்பு என்பன காணப்படுகிறது

இதனை உடன் தீர்வு காண, தமிழ் மக்கள் எம்மோடு இணைய வேண்டும். கடந்த கால ரணில் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எதையும் தமிழ் மக்களுக்காக செய்யவில்லை, இதனை மக்கள் உணர வேண்டும்.

மாற்றத்துக்கான சக்தியாக இந்த தேர்தலை வெற்றி கொள்ள களமிறங்கியுள்ளோம். கிழக்கு மக்களின் இருப்பையும் பாரிய அபிவிருத்தியையும் காணக்கூடிய அரசாங்கமாக கோட்டாபய உள்ளார். இதற்காக நாம் செயற்பட வேண்டும். 12,800 போராளிகள் அன்றைய அரசில் எவ்வித வழக்குகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அது போன்று 150 அரசியல் கைதிகள் உள்ளார்கள். இவர்களை விடுவிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் உடன்படிக்கை செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலின் பின் இதனை தொடர்ந்தும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.


Add new comment

Or log in with...