அரச விடுமுறை வதந்தி; செய்தி எங்கிருந்து வந்தது? | தினகரன்

அரச விடுமுறை வதந்தி; செய்தி எங்கிருந்து வந்தது?

அரச விடுமுறை வதந்தி; செய்தி எங்கிருந்து வந்தது?-No Government Holiday Announced-Department of Government Information

எதிர்வரும் 3 தினங்களுக்கு அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, நேற்று நள்ளிரவு அளவில் செய்தியொன்று வெளிவந்திருந்தது.

இச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹெலகுறு (Helakuru) எனும் பலராலும் பயன்படுத்தப்படும் சிங்கள மொழியிலான தட்டச்சு செய்யும் கையடக்க தொலைபேசி செயலியின் (App) ஒரு அங்கமான, செய்திகளை தொலைபேசிகளுக்கு அறிவிக்கும் வசதியின் ஊடாக அச்செய்தி பரவியிருந்தது.

கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விடுமுறை தொடர்பான செய்தியே மீண்டும் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது.

அதனை இயக்கும் நபரால் மேற்கொள்ளப்பட்ட தவறுதலான கையாளுகை காரணமாக இது நடந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதனால் அதனைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இச்செய்தி சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது.

கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை இந்நிறுவனத்தின் இச்செயலியின் மூலம் பரிமாறிக் கொள்வதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து அண்மையில், இந்நிறுவனம் ஒப்பந்தமொன்றைச் செய்திருந்ததால், அது நம்பகத்தன்மை கொண்ட செய்தியே என பலரும் நினைத்திருந்ததோடு, அது இவ்வாறு வைரலாக பரவுவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

ஆயினும் தவறு நிகழ்ந்ததை குறித்த செயலியின் மூலம்,  மீண்டும் அந்நிறுவனம் அறிவித்திருந்ததோடு, அவ்வாறு அரசாங்கத்தினால் எவ்வித விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை என, அரசாங்க தகவல் திணைக்களத்தினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...