தமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன | தினகரன்


தமிழ் கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் ஏமாற்றங்களையே தந்தன

அரசுக்கு மூன்றில் இரண்டு பெற TNA உதவும் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை
அவ்வாறு நடந்தால் வரவேற்கும் முதல் நபர் நான்தான் -அமைச்சர் டக்ளஸ்

தேர்தலுக்குப் பின்னர் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து எனக்கு பெரிதாக நம்பிக்கை கிடையாது. அரசாங்கம் எவ்வளவு தூரம் இறங்கி சென்று தனது நல்லெண்ணத்தை காட்டினாலும் தமிழ் கூட்டமைப்பு நேர்மையாக நடந்து கொள்ளும் என நான் நினைக்கவில்லை என்று அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அரசுக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டால் அதனை நீங்கள் வரவேற்பீர்களா என கருத்துக் கேட்டபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு பதிலளித்தார்.  ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்தால் அதனை வரவேற்கும் முதலாவது நபராக நான்தான் இருப்பேன்.

ஏனெனில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நான் என்றுமே உறுதியாக இருக்கின்றேன். அது எவரால் செய்யப்பட்டாலும் நான் அதனை நான் நிச்சயம் வரவேற்பேன். 

அந்த மக்களின் பிரச்சினைகள் தீரவே நாங்கள் இவ்வளவு தூரம் பாடுபட்டு வருகிறோம்.

இன்றைய அரசாங்கம், இதற்கு முன்னைய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மிகவும் கீழிறங்கி வந்து பல நல்லெண்ண விடயங்களை செய்து காட்டியுள்ளது.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறும் நல்லெண்ணத்தை காட்ட வேண்டும் என்பதற்கு அதிகமாகவே அரசாங்கம் அன்றும் இன்றும் செயற்பட்டு வருகின்றது. 

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கின்றது.

அதாவது அரசாங்கத்தை குறை கூறுவது அல்லது மக்கள் முன் அரசாங்கத்தைப் பற்றி எதிராகப் பிரசாரம் செய்வது என்பதாகும்.  

இந்நிலையில் அவர்கள் இப்போது தேர்தல் பிரசாரத்திற்காக தெரிவித்துவரும் கருத்தை இவ்வாறு நம்ப முடியும்.

இது ஒரு தேர்தல் கால வாக்கு சேகரிக்கும் பிரசாரம் என்றே நான் கருதுகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் அவர்கள் இன்றைய அரசாங்கத்துடன் மட்டுமல்ல கடந்த 5 வருடங்கள் முண்டு கொடுத்து வந்த ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளது. 

எனவே அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் பெரிதாக நாட்டம் இல்லை.ஒன்று கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிடுகிறார்கள் அல்லது மக்களை ஏமாற்றும் விதத்தில் அறிக்கைகளை விட்டு வகிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று அவர்களை முன்னொரு காலம் போல் ஏமாற்று முடியாது.

எஸ். தில்லைநாதன்


Add new comment

Or log in with...