இணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை | தினகரன்


இணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை

சீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில் அவர்களைத் தனிமையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக 4 ஆடவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குக் கீழுள்ள 11 பிள்ளைகளை அவர்கள் சுமார் 10 நாட்களுக்குத் தனிமையில் அடைத்து வைத்தனர்.

யசாங் அகடமி எனப்படும் சிகிச்சை மையத்தை நடத்திய அந்த ஆடவர்கள், பிள்ளைகளை உடல்வதைத் தண்டனைகளுக்கு உட்படுத்தியதாக சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஒரு போர்வையுடனும் கழிவுகளுக்கு ஒரு பாத்திரத்துடனும் இருட்டு அறையில் அடைக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர்.

4 ஆடவர்களுக்கும் 11 மாதங்கள் முதல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியது. சீனா 2008ஆம் ஆண்டு இணையத்தளத்திற்கு அடிமையாவது ஒரு மனநோய் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதையடுத்து, அதற்குச் சிகிச்சை அளிக்கும் மையங்கள் பல நிறுவப்பட்டன.

இளைஞர்கள் இணையத்தளத்திற்கு அடிமையாகும் போக்கைக் கட்டுப்படுத்த சீன அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சிறு பிள்ளைகள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை கணனி விளையாட்டுகளில் ஈடுபட அது தடை விதித்தது.


Add new comment

Or log in with...