எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்படாது ரூ.1000 சம்பளம்

துரைமார்கள் சிலரின் ஆட்டத்துக்கு விரைவில் முடிவு
அப்பாவின் கனவை நிறைவேற்றுவேனென ஜீவன் தொண்டமான் சத்தியம்   

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எவ்வித நிபந்தனையுமின்றியே பெற்றுக் கொடுக்கப்படும். சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டப்படும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை மேபீல்ட், சாமஸ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, எவ்வித நிபந்தனையுமின்றியே 1,000 ரூபா அவசியமென அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் 1,000 ரூபாவை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 1,000 ரூபா கிடைக்கும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம்.  

தனிவீட்டுத் திட்டத்தை கடந்த காலத்தில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலவே முன்னெடுத்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் என்றனர். ஆனால், மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டுமென்பதே எமது திட்டம். அத்துடன், பொருளாதாரமும் மேம்படுத்தப்பட வேண்டும். நிதிப்பாய்ச்சல் எம்மை சூழவே இருக்கவேண்டும். ஜீவன் தொண்டமான் சின்னப் பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர்.

மலையகத்தை இந்த சின்ன பையனிடம் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன். கண்டியில் போட்டியிடும் எமது இளம் வேட்பாளர் பாரத் அருள்சாமி என்ன செய்யப்போகின்றேன் என கூறி வாக்கு கேட்கின்றார். ஆனால், இவர் பிரதிநிதித்துவத்தை அழிக்க வந்துள்ளார் எனக்கூறியே மற்றவர்கள் வாக்கு கேட்கின்றனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர் 


Add new comment

Or log in with...