சிரிய மக்களுக்கான உதவி: பாதுகாப்பு சபை தீர்மானத்தில் ரஷ்யா, சீனா எதிர்த்து வாக்கு

மில்லியன் கணக்கான உயிர்களை பாதுகாப்பதற்கு தீர்க்கமானது என ஐ.நா கூறும் சிரியாவுக்கு துருக்கியில் இருந்து உதவி விநியோகங்களை விரிவுபடுத்தும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றுக்கு எதிராக ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளன.  

பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் கடந்த செவ்வாக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு எஞ்சிய 13 பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன.  

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு உதவிகளை வழங்க துருக்கியின் ஒரு எல்லைக் கடவைக்கு அனுமதி அளிக்கும் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் மீது பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.  

2011இல் சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது இது 15 ஆவது முறையாகும்.  

வடமேற்கு சிரியாவில் அந்தப் பிராந்தியத்தின் 70 வீத மக்களான 2.8 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் மார்க் லொவ்கொக் தெரிவித்துள்ளார்.    


Add new comment

Or log in with...