‘கொவிட்–19’ காற்றில் பரவுவது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் ஆதாரம் | தினகரன்


‘கொவிட்–19’ காற்றில் பரவுவது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் ஆதாரம்

கொரோனா வைரஸ் தொற்று காற்றின் வழியே பரவுவதற்கான ஆதாரங்கள் பெருகி வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று இது பற்றி அறிவுறுத்திய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

“கொவிட்–19 காவும் முறைகளில் ஒன்றாக காற்றுவழி பரிமாற்றம் மற்றும் தூசுப்படல பரிமாற்றம் நிகழ்வதற்கான சாத்தியம் பற்றி நாம் அவதானித்து வருகிறோம்” என்று உலக சுகாதார அமைப்பின் கொவிட்–19 தொற்றுக்கான தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.  

மூக்கு மற்றும் வாய்வழியாக உதிரும் நீர்த்துளிகளால் மட்டும் கொரோனா பரவுவதாக கடந்த காலத்தில் உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆதாரம் இல்லை என்றும் அந்த அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் தொற்று நோய்ப் பரவல் குறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட திறந்த கடிதம் ஒன்றை உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில் கொரோனா காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். 

இவர்கள் கோரியபடி உலக சுகாதார அமைப்பு காற்று வழியாகவும் கொரோனா பரவுகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தால் உலகம் முழுவதும் ஓரடி சமூக இடைவெளி என்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கங்களுக்கு ஏற்படும்.


Add new comment

Or log in with...