யூனுஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட கிரான்ட் பிளவர் | தினகரன்


யூனுஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட கிரான்ட் பிளவர்

துடுப்பாட்ட ஆலோசனை வழங்கிய சந்தர்ப்பம் ஒன்றில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான யூனுஸ் கான் தனது கழுத்தில் கத்தியை வைத்ததாக கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டப் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் மன்னிப்பு கோரியிருக்கின்றார். கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. குறித்த சுற்றுப்பயணத்தில் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது வழங்கிய துடுப்பாட்ட ஆலோசனை ஒன்றின் போதே யூனுஸ் கான் தனது கழுத்தில் கத்தியை வைத்ததாக கிரான்ட் பிளவர் குறிப்பிட்டதோடு, யூனுஸ் கான் பொதுவாக அறிவுரைகள் வழங்கி கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கு சற்று சிரமமானவர் என்றும் தெரிவித்திருந்தார்.   

”உண்மையில் (யூனுஸ் கானுக்கு) சிறந்த கிரிக்கெட் வாழ்க்கை இருந்தது. எனக்கு பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. டெஸ்ட் போட்டியின் காலை உணவின் போது நான் அவருக்கு சில ஆலோசனைகளை வழங்க முயற்சி செய்தேன். உண்மையில், பாகிஸ்தானுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக இருப்பதால் எனது கிரிக்கெட் வாழ்க்கையும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் சமனாக முடியாது.” 

”ஆனால், எனது ஆலோசனையினை அவர் இலேசாக எடுத்துக் கொள்ளாமல். எனது கழுத்திற்கு அருகே கத்தியினையும் கொண்டு வந்தார். இதன்போது, (எனக்கு) அருகில் அமர்ந்திருந்த (அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான) மிக்கி ஆத்தர் (மேலும் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாதவாறு) தடுத்தார்.” என கிரான்ட் ப்ளவர் Following on Cricket Podcast நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.  

கிரான்ட் பிளவர் வெளியிட்ட கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகியதோடு, பயிற்சியாளர் ஒருவர் மீது கத்தியை வைத்தமைக்காக யூனுஸ் கானுக்கு கண்டனங்களும் வெளியாகின.  

இவ்வாறான கருத்து ஒன்றினை வெளியிட்டது தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ள யூனுஸ் கானினுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்குடன் அல்ல என கிரான்ட் பிளவர் மன்னிப்பு கோரியிருப்பதாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

”நான் யூனுஸ் கான் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு மன்னிப்பு கோருகின்றேன். நான் அதனை (குறித்த கருத்தை) கேள்வியொன்றுக்கு பதில் வழங்கும் போது வெளியிட்டிருந்தேன். ஆனால், நேர்காணல் முடிந்த பின்னர் ஊடகங்களில் இது பெரிய விடயமாக மாறும் என நினைத்திருக்கவில்லை.” என கிரான்ட் பிளவர் தெரிவித்தார்.  

கிரான்ட் பிளவர் முன்னதாக பயிற்றுவிப்பாளராக செயற்படும் போது நடக்கும் இவ்வாறான சம்பவங்கள் சுவாரசியமானதாக அமையும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

”ஆம், அது சுவாரசியமானதாக இருந்தது. ஆனால், இது பயிற்றுவிப்பில் ஒரு பகுதிதான். அது (எனது) இந்த (பயிற்றுவிப்பு) பயணத்தினையும் விறுவிறுப்பாக்குவதோடு, நான் அதனை இரசித்துப் பார்க்கின்றேன். நான் இன்னும் பல விடயங்களை கற்க வேண்டி உள்ளது. ஆனால், இப்போது இருக்கும் நிலையினை அதிஷ்டமானதாக கருதுகின்றேன்.”  

தற்போது கிரான்ட் பிளவர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் மிக்கி ஆத்தர், தான் பாகிஸ்தானை பயிற்றுவித்த போது, கிரான்ட் பிளவர் குறிப்பிட்ட சம்பவம் உண்மையாக நடந்திருந்தது என உறுதி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

”யூனுஸ் கான் தனது கையில் வைத்திருந்த கத்தி உணவு பரிமாறுவதற்காக வைக்கப்பட்ட கத்தியாக இருந்தது.”  

”(குறித்த சந்தர்ப்பத்தில்) நான் யூனுஸ் கானை அமைதிப்படுத்தியதோடு, இரண்டாம் இன்னிங்ஸில் ஓட்டங்கள் குவிக்குமாறும் கூறினேன். அதன்படி, அவர் இரண்டாம் இன்னிங்ஸில் நல்ல ஓட்டங்கள் பெற்றார்.” 

இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் யூனுஸ் கான் 65 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், யூனுஸ் கான் இந்த சம்பவம் குறித்து மறுப்புக்கள் எதனையும் இதுவரை வெளியிடாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கிரான்ட் பிளவர் – யூனுஸ் கான் இடையில் தொலைபேசி மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  

அதேநேரம், 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக இருந்த இன்சமாம்-உல்-ஹக் கிரான்ட் பிளவர் குறிப்பிட்டபடி ஒரு சம்பவம் அப்போது நடக்கவில்லை என்றும், அது நடந்ததாக தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் தொலைக்காட்சி ஒன்றிடம் வித்தியாசமான நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.    


Add new comment

Or log in with...