யாழில் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

யாழில் கைக்குண்டு, வாள்கள், இராணுவச் சீருடைகள் மீட்பு-Jaffna Sword Group Weapons

- தெரிவத்தாட்சி அலுவலர் தாக்குதல் சந்தேகநபரிமிருந்து தகவல்

வாள்வெட்டு வன்முறைக்கும்பல் தமது பதுங்குமிடமாக பயன்படுத்திய வீடொன்றில் பொலிசார்  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது  கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என,பொலிசார் தெரிவித்தனர்

யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மல்லாகத்தை சேர்ந்த நால்வர் நேற்றிரவு யாழ்ப்பாண பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தபோது, பிரதான சந்தேக நபரான மருதனார் மடத்தை சேர்ந்த ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

அதன்போது வீட்டினுள் இருந்தும் வீட்டின் பின் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் இருந்தும்  கைக்குண்டு ஒன்று, வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் நான்கு, மோட்டார் சைக்கிள்கள் மூன்று, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் கைக்குண்டு, வாள்கள், இராணுவச் சீருடைகள் மீட்பு

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நீர்வேலி கரந்தன் பகுதியில் உள்ள குறித்த வீட்டினையே வாள் வெட்டுக்குழு தமது பதுங்குமிடமாகவும், இங்கிருந்தே வாள்வெட்டுகளை மேற்கொள்ள தயாராகி செல்வதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

யாழில் கைக்குண்டு, வாள்கள், இராணுவச் சீருடைகள் மீட்பு

யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான "கனி குரூப்" எனும் வன்முறை கும்பலில் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த வீடு தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

(யாழ்.விசேட நிருபர்-மயூரப்பிரியன், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)


Add new comment

Or log in with...