இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் | தினகரன்


இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம்

இந்தியாவுக்கு ஆதரவாக தங்களது நாட்டின் இராணுவம் உறுதுணையாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தென்சீன கடற்பரப்புக்கு 2 போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. தென்சீன கடற்பரப்பின் பல பகுதிகளை சீனா தங்களுக்கு உரியது என உரிமை கோருகிறது.ஆனால் சீனாவின் இந்த அத்துமீறிய உரிமை கோரலை பல்வேறு நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. சீனாவின் இந்த செயலால் தென்சீன கடற்பரப்பு பதற்றத்துடனேயே இருந்து வருகிறது.

தென்சீன கடற்பரப்பில் தீவுகளை இராணுவ மயமாக்கும் போக்கை சீனா தொடருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்காவின் போர் விமானங்கள் தென்சீன கடற்பரப்பில் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க இராணுவ அதிகாரி, இந்தியாவுடனான சீனாவின் மோதலை சுட்டிக்காட்டி எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் இராணுவம் உறுதுணையாகவே இருக்கும் என்றார்.

இதேவேளை இந்தியா உட்பட  சீனாவை எங்கும் அதிகாரம் செய்ய விட மாட்டோம் என்று  வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் அதிரடியாக  தெரிவித்துள்ளார்.இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல், எந்த நாட்டு பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு, அமெரிக்க இராணுவம் துணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

தென் சீனக் கடலில் பல தீவுகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், தாய்வான், புருனே உள்ளிட்ட நாடுகள் இப்படியான குற்றச்சாட்டுகளை சீனா மீது தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. சீனாவுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அதிரடியாக அனுப்பி வைத்துள்ளது.


Add new comment

Or log in with...