இதுவரை தெரிந்து கொள்ளாத நமது தேசத்தின் ஆச்சரியம் | தினகரன்


இதுவரை தெரிந்து கொள்ளாத நமது தேசத்தின் ஆச்சரியம்

அநேகமான மனிதர்கள் இயற்கையை ரசிப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரு சிலரே அதனை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணம் செய்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல் இயற்கை அழகுமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க சூழல் என்பதனை இன்னுமொருவர் ரசிக்க முற்படும் போதே அறிந்து கொள்கின்றோம். அதுவரை நமது சூழல் பற்றிய புரிதல்கள் என்பது பூச்சியமே. 

உலகில் இலங்கை தேசம் மிக முக்கியமானது. பிரபல்யமான சுற்றுலாத் தலங்களுடன் வரலாற்றுப் பாரம்பரியங்கள் நிரம்பிய ஒரு நாடு.

இந்த நாட்டில் தெற்காசியாவின் பிரசித்தமான இடமொன்று காணப்படுகின்றது.பொதுவாக இப்படியான அபூர்வங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கு நம்மில் அதிகம் பேர் ஆர்வம் கொள்வதேயில்லை. 

தெற்காசியாவில் உள்ள அற்புதமான ஒரு இடம் 'புளுமார்பல் ரொக்' (நீலப் பளிங்குப் பாறை) ஆகும். இலங்கையில் அது தனித்துவமான பாறையாகும். உண்மையில் சொல்வதானால் தெற்காசியாவில் ஒரே ஒரு பாறை வகையாக அது இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. 

நுவரெலியா மாவட்டத்தில், வலப்பனை பிரதேசத்தில், பஞ்சிக்காபுர கிராமசேவகர் பிரிவில் அந்த இடம் அமையப் பெற்றுள்ளது. இந்த புளுமார்பல் ரொக் பிரதேசம் சீதையை சிறை வைத்த இடமென்பது ஐதீகம். சீதையைக் கவர்ந்த இராவணன் சீதை அவனது விருப்பத்திற்கு இணங்க மறுதத்ததால், அவளை சிறை வைத்த அசோகவனப் பிரதேசமாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிரதேசதம் தொடர்பாக கூறப்படுகின்ற வரலாற்றுக் கதைகள் மூலம் இதனை அறிய முடிகின்றது. வரலாறுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. 

சீதைக்கு ஏற்பட்ட குஷ்டரோகத்தை நீக்குவதற்கு தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் கரண்டிகுளத்தில் வீசப்பட்டது. அக்கல்லின் ஒரு பகுதியே இப்பகுதியில் உள்ளது. இப்போது அக்குளம் கருண்ட குளம் என அழைக்கப்படுகின்றது. 

இங்குள்ள நீலக் கல் சீதையின் நோயினை குணப்படுத்த அனுமன் தேவலோகத்தில் இருந்து கொண்டுவந்து வீசியதாக இங்குள்ள மூத்தோர் சொல்கின்றனர். 

இப்பிரதேசத்திற்கு இந்தியாவில் இருந்து அதிகளவான பக்தர்கள் வந்து செல்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பிரதேசம் எவ்வித பராமரிப்பும் அற்று இருப்பது கவலையான ஒரு விடயம். பொதுவாக மக்களிடம் இருக்கின்ற ஒரு மனோநிலைதான் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களை பாதுகாப்பது அரசு அல்லது அரசாங்கம் என்பதாகும். ஆனால் தத்தமது சூழலில் இருக்கின்ற ஒரு சிறப்பினை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிகள் செய்வதற்கு அப்பால் தமக்குள்ள பொறுப்புகள் அதிகட' என்கிற மனோநிலை உருவாகாதவரை இப்படியான எதனையும் பாதுகாக்க முடியாது என்பதனை எண்ணத்திற் கொள்ளுதல் அவசியம். 

இவ்வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடம் தொடர்பாக இங்குள்ள மக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, இங்கு வருகை தருகின்ற உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், இப்பகுதியை துவம்சம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்கின்றனர். 

இங்குள்ள கற்பாறையை அகழ்ந்து செல்வதை நிறுத்துமாறும் மக்கள் கோருகின்றனர். இங்குள்ள கற்பாறை வகை இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் எங்கும் இல்லை. இதனை நமது எதிர்கால சந்ததிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். 

இந்த பாறையின் தனித்துவம் பற்றி மக்கள் குறிப்பிடும் போது, இது நீலம், பச்சை நிறத்தில் தெரிகிறது. வெயிலில் பளபளப்பாக இருக்கிறது" என்கின்றனர்.  

அதனை எம்மாலும் அவதானிக்க முடிந்தது. இந்தப் பாறையின் மேற்பரப்பு மென்மையானதாகவும், மற்றும் கடினமான கற்பாறை போலல்லாது, தேய்த்தால் கைக்கு மிருதுவாகவுமுள்ளது. இந்தப் பாறை வளர்ந்து வருவதாகவும், மனித உடலின் தோலிலுள்ள நோய்களை குணப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதன் நிமித்தமே அதிகளவான மக்கள் இங்கு வருகை தருவதாக குறிப்பிடுகின்றனர் இங்குள்ள மக்கள். 

இந்த தனித்துவமான பாறையின் பெரும் பகுதி பூமிக்கு அடியில் அமைந்துள்ளது மற்றும் கருண்டா ஓயா நீரோடை ஆரம்பிக்கும் இடத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது. இந்த பாறைக்கு மேலே பாயும் கருண்டா ஓயாவின் நீரிலிருந்து குளிப்பதால் தோலிலுள்ள தடிப்புகள், பல தோல் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர். 

இந்த புளுமார்பல் பாறையின் ஒரு பகுதியை மற்றொரு பாறையில் சிறிது தண்ணீரில் தேய்க்கும் போது ஒரு வெண்மையான வடிவம் உருவாகுகிறது. இந்த வடிவத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வயிற்று வலி முதல் பாம்புக்கடி வரையான பல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. 

குறித்த இடமானது வாலபனேவைக் கடந்து, நில்டாண்டஹின்னா வழியாக கோட்டம்பே சந்திக்குச் செல்கிறது. இச்சந்தியிலிருந்து பண்டிதாயகும்புரா கிராமத்திற்கு ஒரு சிறிய வீதியில் சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இவ்விடத்தை அடைந்து கொள்வதற்கு எவ்வித வீதிப் பெயர்ப் பலகைகளும் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையே உள்ளது. மிகச் சிரமத்திற்கு மத்தியிலே தெற்காசியாவின் பிரசித்தமான இடமொன்றினை அடைய வேண்டும் என்பதனை சொன்னால் நம்ப முடியாதுள்ளதல்லவா? நீங்கள் செல்லும் இவ்விடத்திற்கு அழைத்துச் செல்ல அக்கிராமத்திலிருந்து ஒரு வழிகாட்டி தேவைப்படலாம். பண்டிதாயகும்புரவிலிருந்து வீதியில் சுமார் 1.5 கி.மீ தூரத்தில் பயணித்தால், பக்கவாட்டில் ஒரு செங்குத்தான பிரதேசத்தில் வெளிப்படும் 'புளுமார்பல் ரொக்'கிற்கு செல்ல முடியும். அதன் வழியாகவே கருண்டா ஓயா ஓடுகிறது. 

 தேசத்து வரலாறுகள் மிக முக்கியமானவை, அவைகளை பாதுகாப்பது அத்தேசத்தில் வாழுகின்ற எல்லோருடைய பொறுப்பாகும். வரலாறுகள் இல்லாது தேசம் வெற்றுக் காகிதங்களுக்கு சமன் என்கிற கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்போம்.  

 'புளுமார்பல் ரொக்' பிரதேசத்தை அடைவதற்கான எந்த வீதிப் பெயர்ப்பலகைகளும் இதுவரை காட்சிப்படுத்தப்படவில்லை. இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படுதல் அவசியம். 

இயற்கையைப் பாதுகாப்போம், அதனை அப்படியே எதிர்கால சந்ததிகளுக்கு கையளிப்போம். பசுமையான சூழலை பேணிப் பாதுகாப்போம்.

றிசாத் ஏ. காதர் - ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...