ருபெல்லா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை பிரகடனம்

ருபெல்லா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை பிரகடனம்-Maldives Sri Lanka Eliminate Measles and Rubella-Ahead of 2023 Target

உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது

இலங்கை, ருபெல்லா நோய் அற்ற நாடாக, உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

அதற்கமைய தென்கிழக்கு ஆசியாவில், ருபெல்லா (rubella) மற்றும் பொக்கிளிப்பான் (measles) ஆகிய நோய்கள் ஒழிக்கப்பட்ட முதல் இரு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நாடுகள், 2023 ஆம் ஆண்டில் அந்த இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டிலேயே அது அடையப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங், இந்த உயிர்கொல்லி மற்றும் பலவீனப்படுத்தும் நோய்களுக்கு எதிராக அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பது, மக்களின் ஆரோக்கியத்திற்கும் அனைவரின் பாதுகாப்பதற்குமான எமது முயற்சியின் ஒரு முக்கியமான படியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பொக்கிளிப்பான் மற்றும் ருபெல்லா ஒழிப்புக்கான தென்கிழக்கு ஆசிய பிராந்திய உறுதிப்படுத்தல் ஆணைக்குழுவின் இணையவழியாக இடம்பெற்ற ஐந்தாவது கூட்டத்தின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவானது, தொற்றுநோயியல், வைரஸ் பிரிவு, பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 11 சுயாதீன சர்வதேச நிபுணர்களைக் கொண்டுள்ளது.

ஒரு நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொப்பளிப்பான் மற்றும் ருபெல்லா வைரஸ்கள் பரவலாக பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லாததாக ஆழமாக அவதானிக்கப்பட்டதன் பின்னர் அந்நாடு குறித்த நோய்கள் அற்ற நாடுகளாக உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இறுதியாக, இலங்கையில் கடந்த 2016 மே மாதம் கொப்பளிப்பான் நோயும், 2017 மார்ச்சில் ருபெல்லா நோயும் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, மாலைதீவில் கடந்த 2009 இல் கொப்பளிப்பான் நோயும், 2015 ஒக்டோபரில் ருபெல்லா நோயும் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...