கைதிகளை பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளை உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்குமாக 316 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 200  பேரின் PCR பரிசோதனை முடிவுகளானது கொவிட்-19 தொற்றுக்கு அவர்கள் உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையோரின் PCR பரிசோதனை முடிவுகள் இன்று (08) மாலை கிடைக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான குறித்த கைதியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 182 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் PCR பரிசோதனையின் பின்னர், புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அத்தோடு, சிறைச்சாலை அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்  எனவும், அவர் தெரிவித்தார்.    


Add new comment

Or log in with...