சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை | தினகரன்


சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்காக செலுத்தப்படும் வட்டி வீதத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்காக அர்ப்பணித்த சிரேஷ்ட பிரஜைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டி வீதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ள விசேட வட்டி வீதம் 8%ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், வட்டி வீதத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வருமான வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வெளியாகி  வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதோடு, ஆதாரமற்றவை எனவும், நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரஜைகள் வைப்பீட்டு வரி 8 சதவீதத்தினால் குறைப்பு' என்ற தலைப்பின் கீழ் நேற்றையதினம் (06) ஒரு சில பத்திரிகைகளில் வெளியான செய்தி தொடர்பாக உயர்கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம், தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தவினால் மேற்கொள்ளப்பட்ட தெளிவுபடுத்தல் பின்வருமாறு.

தமது வாழ்க்கையில் இளம்பராய காலப்பகுதியில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்பு செய்த சிரேஷ்ட பிரஜைகளின் வருமான நிலையை பாதுகாக்கும் எதிர்பார்ப்புடன் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி வீதம்' என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்பட்ட இந்த பயன்களில் எந்தவித திருத்தமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதேபோன்று, சம்பந்தப்பட்ட செய்தியில் சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி மூலமான வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த வருமான வரி நிவாரணம் நீக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அரசாங்கத்தினால் இவ்வாறான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவில்லை.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து 2020.01.01 தொடக்கம் இதுவரையில் நிலவிய வரி நிவாரணம் மாதாந்த வட்டி வருமானமான ரூபா 150,000.00, ரூபா 250,000.00 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு அமைவாக வருடத்திற்கு ரூபா 3,000,000 வரையிலான வருமானம் வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதனால் மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்ட வகையில், வட்டி மூலமான வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட வரி விடுப்பு இரத்து செய்யப்படவில்லை.


Add new comment

Or log in with...