' உண்மையான சீடத்துவம் என்பது தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பது' | தினகரன்


' உண்மையான சீடத்துவம் என்பது தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பது'

இறைவார்த்தையானது எது உண்மையான சீடத்துவம் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கின்றது.

நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம் என்னைவிடத் தன் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரிடம் மிகுதியாக அன்பு கொண்டிருப்பவர் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார்.  

இயேசு இவ்வாறு சொல்வதால் இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர் தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களை வெறுக்கவேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களைவிட இயேசுவை அன்பு செய்யவேண்டும், அவருக்கு முதன்மையான இடம் தரவேண்டும் என்பதே.

இத்தகைய வாழ்விற்கு இயேசுவே மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார்.  இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபிறகு தன்னுடைய இரத்த உறவுகளை விட இறைவனுக்கும் இறையாட்சிக்குமே முதன்மையான இடம் கொடுத்தார். இதனை இயேசு தன்னைத் தேடிவந்த தாயிடமும் சகோதர சகோதரிகளிடம் பேசக்கூடிய வார்த்தைகளைக் கொண்டு (மத் 12: 48-50) மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

.தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவ வாழ்வின் முதல்நிலை என்றால் தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவ வாழ்வின் இரண்டாம் நிலையாகும்.

இதுகுறித்து இயேசு தொடர்ந்து பேசுகின்றபொழுது, “...தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்” என்கின்றார்.

இயேசுவின் சீடர் அவருக்காகத் தன் உயிரையும் இழக்கத் துணிகின்றபொழுது, அதை காத்துக் கொள்பவராக இருக்கின்றார்.

இயேசுவின் பொருட்டு எத்தனையோ புனிதர்கள், மறைசாட்சிகள் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தனர். அவர்கள் அன்று தங்களுடைய உயிரை இழந்தாலும் இன்று அவர்கள் இறைவனின் திருமுன் மகிழ்ந்திருக்கின்றார்கள். நாமும்கூட நம்முடைய உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்தோமெனில் அதை மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர் தன்னுடைய இரத்த உறவைவிட தன்னுடைய உயிரைவிட தனக்கு முதன்மையான இடம் தரவேண்டும் என்று சொல்லும் இயேசு, அவர் தன் பொருட்டு சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.

இயேசுவின் காலத்தில் சிலுவை என்பது இழிவானதாகவும் அவமானத்தின் சின்னமாகவும் கருதப்பட்டது. (1 கொரி 1: 23). ஆகவே, தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர் சிலுவையைச் சுமக்கவேண்டும் என்று இயேசு சொல்கின்றபொழுது அவர் அவமானங்களையும் துன்பங்களையும் விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தன் இரத்த உறவைட தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து,

சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கும் தன் சீடர்களுக்கு உதவிகள் செய்யகூடியவர்களுக்கு இறைவன் தக்க கைமாறு அளிப்பார் என்று இயேசு நற்செய்தியில் குறிப்பிடுகின்றார்.

இயேசுவின் சீடர்கள் அவருடைய பதிலாளிகளாக இருக்கின்றார்கள்.

எனவே, அவருடைய சீடர்களுக்கு குளிர்ந்த நீரோ, உணவோ, தேவைப்படுகின்ற உதவிகளோ செய்யக்கூடியவர்கள் இயேசுவுக்கே செய்பவர்களாக மாறுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் தக்க கைமாறு தருகின்றார்.

அருட்பணி மரிய அந்தோனிராஜ்


Add new comment

Or log in with...