மறையுண்மையை மையப்படுத்தி கொண்டாடப்படும் கத்தோலிக்க திருவிழாக்கள்

(கடந்த வாரத் தொடர்)

அடுத்து எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின் அது நம் உடலின் இரத்தமாக தசையாக எலும்பாக நரம்பாக மாறிவிடுகிறது என்பது அடுத்த காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

அப்பத்திற்கும் இரசத்திற்கும் உள்ள இந்த அடிப்படை குணங்கள் தனக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார்.

எளிய உணவாக நாம் தினமும் உண்ணும் உணவாக நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்தக் கொடையை இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா.

'இம்மானுவேல்' அதாவது 'கடவுள் நம்மோடு' என்ற பெயருடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயேசு தன் உலக வாழ்வுக்குப் பின்னும் நம்மோடு தங்கியிருக்கிறார் என்பதை தன் திரு உடல் திரு இரத்தம் என்ற மறையுண்மையின் வழியாக நிலைநாட்டினார்.

அவர் இந்த திருவருள் அடையாளத்தை உருவாக்கிய நேரமும் இவ்விழாவின் மற்றொரு முக்கிய பரிமாணத்தை உணர்த்துகிறது. இறுதி இராவுணவின்போது தன் நெருங்கிய நண்பன் தன்னைக் காட்டிக்கொடுக்கப்போவதை அறிந்த வேளையில் இயேசு அப்பத்தையும் இரசத்தையும் சீடர்களுக்கு வழங்கி தான் அவர்களோடு என்றும் வாழப்போவதை உறுதி செய்தார்.

தன் திருவுடல் திருஇரத்தத்தின் வழியாக நம்முடன் எப்போதும் வாழும் இயேசுவின் பிரசன்னத்தை மையப்படுத்தி பல புதுமைகள் வரலாற்றில் நடந்துள்ளன; இன்றும் தொடர்கின்றன.

இயேசுவின் பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் உணர்த்தும் திருப்பலி, திருநற்கருணை ஆகிய அற்புத மறையுண்மைகளை மையப்படுத்திய உன்னத நிகழ்வுகள் சிலவற்றை அசைபோடுவது பயனளிக்கும்.

இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் சபையின் தலைவராவதற்கு முன் ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர் புதிய துறவிகளின் பயிற்சியாளராக இருந்தார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி வீசப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை புதியதுறவியர் இல்லம் அதிக சேதமின்றி தப்பித்தது.

அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அக்கோவிலில் அருட்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:

 "நான் திருப்பலி நிகழ்த்தியபோது மக்களை நோக்கித் திரும்பி நின்று 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கரங்களை விரித்தேன். ஆனால் அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைந்துபோகச் செய்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது விரிந்த என் கரங்கள் அப்படியே உறைந்து நின்றன.

அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா முக்கியமாக இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது"என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் தன் நினைவுகளை பதிவுசெய்துள்ளார்.

அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் மருத்துவம் படித்தவர் என்பதால் ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின் புதிய துறவியர் இல்லத்தில் மட்டுமல்ல வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

ஒரு நாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது நாகமுரா சான் என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய் கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவர் இருந்த நிலையைக் கண்ட அருட்தந்தை அருப்பே அவர்கள் கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு அவர் அருகில் முழந்தாள் படியிட்டு அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம் "சாமி எனக்கு திவ்விய நற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி தான் கொண்டு வந்திருந்த திவ்விய நற்கருணையை அந்தப் பெண்ணுக்கு வழங்கினார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட நாகமுரா சான் அவர்கள் சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

ஒரு மறக்கமுடியாத திருப்பலி மறக்க முடியாத நற்கருணைப் பகிர்வு இரண்டையும் அருள்பணி அருப்பே அவர்கள் தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக பதிவுசெய்துள்ளார்.

காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவே நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா.

ஏனைய ஆண்டுகளைவிட இவ்வாண்டு இவ்வுலகம் பெரிதும் காயப்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருநாளும் உணர்ந்துவருகிறோம். காயப்பட்டு கிடக்கும் மக்கள் திருப்பலிகள் வழியே ஆறுதல் பெற இயலாமல் அனைத்து நாடுகளிலும் திருப்பலிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலை பல நாடுகளில் நீடிக்கிறது.

இத்தகைய சூழலில் ஆலயங்களுக்குச் சென்று கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர முடியாத மக்களைத் தேடி ஆண்டவர் வருகிறார் என்பதை உணாத்தும்வண்ணம் மக்கள்  வாழும் இடங்களுக்கு அருள்பணியாளர்கள் திருநற்கருணையை பவனியாக ஏந்திச் சென்றுள்ளனர். மருத்துவ மனைகளில் சிறைகளில் மக்கள் வாழும் பகுதிகளில் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றினால் நோயுற்று கிடந்தோருக்கு திவ்வியநற்கருணை​ வழங்கியுள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட்ட பல அருட்பணியாளரும் துறவியரும்  தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பெருங்கோவிலில் இவ்வாண்டு புனித வியாழன் திருப்பலியை மக்களின் பங்கேற்பின்றி சிறப்பித்த வேளையில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்குப் பணியாற்றி தங்கள் உயிரை வழங்கிய இந்த அருள்பணியாளரை துறவியரை மற்றும் மருத்துவப் பணியாளரை சிறப்பான முறையில் குறிப்பிட்டு அவர்கள் "நம்மிடையே உலவி வந்த அடுத்தவீட்டுப் புனிதர்கள்" என்பதை தன் மறையுரையில் கூறினார்.

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் எத்தனை தடைகள் வந்தாலும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் நிலைநாட்டிய இன்றும் நிலைநாட்டும் தியாக உள்ளங்கள் இந்த விழாவின் உண்மைப் பொருளை நமக்கு தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர்.  தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல் நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்ள கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்தம் பெருவிழா நமக்கு உதவுவதாக.  

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...