ஆடிவேல் விழா; மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் | தினகரன்


ஆடிவேல் விழா; மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம்

- பங்குபற்ற பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது

மூவின மக்களின் பக்திக்குரிய வரலாற்று சிறப்பு மிக்க தேசிய ரீதியில் மிகவும் முக்கிய விழாவாக கருதப்படும் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி அன்று மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவ வைபவத்துடன் நிறைவடையவுள்ளது.

கொவிட்-19 தொற்று ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா 2020 ஐ நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஆடிவேல் விழாவை முன்னிட்டு பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லையில் முழுமையாக பொதுமக்களுக்கு மத நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் கிட்டாது. இதேபோன்று வடக்கு, கிழக்கிலிருந்து உகந்தை குமண– யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாக செல்வோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட மாட்டாது என்றும் இதில் கலந்துகொள்வோருக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுகாதார பிரிவினரின் முழுமையான ஆலோசனையின் அடிப்படையில் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நடைபெறும் கால எல்லைக்குள் கதிர்காம புனித நகரத்திற்குள் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், மொணராகலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...