குசல் மெண்டிஸ் பிணையில் விடுவிப்பு | தினகரன்

குசல் மெண்டிஸ் பிணையில் விடுவிப்பு

குசல் மெண்டிஸ் பிணையில் விடுவிப்பு-Accident-Kusal Mendis Released On Bail

- சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இடைநிறுத்தம்
- மரணித்தவருக்காக நஷ்டஈடு வழங்கவும் இணக்கம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (05) அதிகாலை 5.00 மணியளவில், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிலுள்ள பழைய காலி வீதி, ஹொரேதுடுவ பிரதேசத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

மொரட்டுவ திசையிலிருந்து பாணந்துறை நோக்கு பயணித்த குசல் மெண்டிஸ் பயணித்த கார், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

இவ்விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த, 64 வயதான, பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (05) கைது செய்யப்பட்ட அவர், இன்று (06) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.

அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், நீதவான் உத்தரவிட்டார்.

இதன்போது, மரணமடைந்தவருக்காக, ரூபா 10 இலட்சம் நஷ்டஈடு வழங்குவதற்கு, குசல் மெண்டிசின் சட்டத்தரணி நீதிமன்றில் இணக்கம் தெரிவித்திருந்ததோடு, அதில் ரூபா 2 இலட்சத்தை இன்று செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி மீள எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...