சாரதி அனுமதிப்பத்திரமின்றி ஒலி எழுப்பி இடைஞ்சல்; சாரதி கைது | தினகரன்

சாரதி அனுமதிப்பத்திரமின்றி ஒலி எழுப்பி இடைஞ்சல்; சாரதி கைது

காலி பஸ் தரிப்பிடத்தில், செல்லுடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பிய  (ஹோர்ன் அடித்த) தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று  (05) இக்கைது இடம்பெற்றுள்ளது.

காலி பஸ் தரிப்பிடத்திலுள்ள பொலிஸ்  சோதனைச் சாவடி பொறுப்பதிகரியினால் கைது செய்யப்பட்ட குறித்த சாரதி, காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியுடன், அதன் சாரதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பஸ் நிலையத்தினுள் குறித்த பஸ் வண்டி நுழைந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபோது, பஸ் தரிப்பிடத்திலிருந்த பொலிஸ் அதிகாரி அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளார். அதற்கமைய, அவர் பஸ்ஸை ஓரமாக்கும் வரை காத்திருந்த போதிலும், அதனை வழங்காது தொடர்ந்தும் ஒலி எழுப்பியவாறு இருந்தமையால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் பஸ் வண்டியைச் செலுத்துவதற்கான உரிய அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தையே குறித்த சாரதி வைத்திருந்துள்ளதாக, காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...