வாக்களிப்பவருக்கு உதவ மற்றுமொருவரை அழைத்துச் செல்லல்; விண்ணப்பப்படிவம்

வாக்களிப்பவருக்கு உதவ மற்றுமொருவரை அழைத்துச் செல்லல்; விண்ணப்பப்படிவம்-Legal Provisions Voters with Disability to be Accompanied by a Person-Application

3 மொழிகளிலுமான விண்ணப்பப்படிவம் இப்பக்கத்தின் அடியில் இணைப்பு

வலிமையிழந்த வாக்காளர் ஒருவருக்கு வாக்கெடுப்பு நிலையத்தில்‌ வாக்குச்சீட்டை அடையாளமிடுவதற்காக, உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பப்படிவமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விண்ணபப்படிவத்தை (3 மொழிகளிலும் அடியில் இணைக்கப்பட்டுள்ளது) அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலும், கிராம அலுவலர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த விண்ணப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து பின்னர் கிராம சேவகர் மூலம் அத்தாட்சிப்படுத்தி அதனைத் தொடர்ந்து அரசாங்க மருத்து அலுவலரினால் உறுதிப்படுத்த வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, குறித்த விண்ணப்பப்படிவத்தை தேர்தல் தினத்தன்று, உடன் வருபவருடன் வாக்கெடுப்பு நிலையத்தில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரிடம் ஒப்படைத்து அவரது அனுமதியைப் பெற்று வாக்களிப்பு நடவடிக்கையில ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு, வாக்களிப்பவர் தமது வாக்காளர் அட்டையுடனும், குறித்த இருவரும் தத்தமது ஆளடையாள அட்டைகளுடன் சமூகமளிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள முழுமையான வழிகாட்டல் வருமாறு,

2011 ஆம்‌ ஆண்டின்‌ 28 ஆம்‌ தேர்தல்கள்‌ (விசேட ஏற்பாடுகள்‌) சட்டத்தின்‌ மூலம்‌ திருத்தப்பட்ட முதன்மைச்‌ சட்டவாக்கத்தின்‌ 40(2) பிரிவிற்கமைய 2020.08.05 ஆம்‌ திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்‌ தேர்தலின்போது முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கட்புலப்‌ பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும்‌ உடல்‌ ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு உள்ளான வாக்காளர்‌ ஒருவருக்கு வாக்கெடுப்பு நிலையத்தில்‌ வாக்குச்சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர்‌ ஒருவரை உடனழைத்துச்‌ செல்லக்கூடியவாறு புதிய சட்ட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

02. ஆயினும்‌, அவ்வாறு உடனழைத்துச்‌ செல்லும்‌ அல்வுதவியாளர்‌ 18 வயதைப்‌ பூர்த்திசெய்த ஒருவராக இருக்க வேண்டுமென்பதுடன்‌, பாராளுமன்றத்‌ தேர்தலில்‌ போட்டியிடுகின்ற வேட்பாளரொருவராக இருத்தலாகாது. அதேபோன்று, பாராளுமன்றத்‌ தேர்தலில்‌ அரசியற்‌ கட்சியொன்றின்‌ அதிகாரமளிக்கப்பட்ட முகவரொருவராகவோ அல்லது பிரதேச முகவரொருவராகவோ அல்லது சுயேச்சைக்‌ குழுவொன்றின்‌ குழுத்‌ தலைவராகவோ அல்லது வாக்கெடுப்புப்‌ பிரிவின்‌ முகவரொருவராகவோ அல்லது வாக்கெடுப்பு நிலைய முகவரொருவராகவோ செயலாற்றாத ஒருவராகவுமிருத்தல்‌ வேண்டும்‌. அத்துடன்‌, ஏதேனும்‌ வலிமையிழப்பொன்றிற்கு உட்படாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

03. மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உதவியாளர்‌ ஒருவரை உடனழைத்துச்‌ செல்வதற்காக பாராளுமன்றத்‌ தேர்தல்கள்‌ சட்டத்தின்‌ ஐந்தாம்‌ அட்டவணை மூலம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ள தகுதிச்‌ சான்றிதழொன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின்‌ அலுவலர்களிடம்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌.

04. இத்தகுதிச்‌ சான்றிதழைப்‌ பெற்றுக்கொள்வதற்குத்‌ தேவையான விண்ணப்பப்படிவங்களை அனைத்து மாவட்ட தேர்தல்கள்‌ அலுவலகங்களிலிருந்தும்‌, கிராம அலுவலர்‌ அலுவலகங்களிலிருந்தும்‌ பெற்றுக்கொள்ள முடியும்‌. கட்புலப்‌  பாதிப்பு அல்லது வேறேதேனும்‌ உடல்‌ வலிமையிழப்புக்குட்பட்ட ஆளொருவர்‌, கிராம அலுவலரிடமிருந்து விண்ணப்பப்படிவமொன்றைப்‌ பெற்று பூரணப்படுத்திக்‌ கொடுத்து கிராம அலுவலரின்‌ சான்றிதழைப்‌ பெற்றுக்கொள்ளல்‌ வேண்டும்‌. அதன்‌ பின்னர்‌, குறித்த சான்றிதழை அரசாங்க மருத்துவரொருவரிடம்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌. மருத்துவ அலுவலர்‌ வாக்காளரைப்‌ பரிசோதித்து அந்த சான்றிதழில்‌ வாக்காளரின்‌ தகுதியைக்‌ குறிப்பிட்டு அத்தாட்சிப்படுத்துவார்‌.

05. வலிமையிழப்பிற்கு உள்ளான வாக்காளர்‌, தனது உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது வாக்கெடுப்பு நிலையத்தில்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ ஏதேனுமோர்‌ அடையாள அட்டையையும்‌ இந்த தகுதிச்‌ சான்றிதழையும்‌ எடுத்துக்கொண்டு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளருடன்‌ செல்ல வேண்டும்‌. வாக்கெடுப்பு நிலைய பணியாள்தொகுதியினர்‌ வாக்காளரின்‌ அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன்‌ பின்னர்‌ வாக்கெடுப்பு நிலையத்தின் வழமையான நடைமுறையைப்‌ பின்பற்றி வாக்குச்சீட்டொன்று விநியோகிக்கப்படுவதுடன்‌, அவ்வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக்‌ கொள்வதற்காக உதவியாளருடன்‌ வாக்காளர்‌ சிரேஷ்ட தலைமை தாங்கும்‌ அலுவலரிடம்‌ ஆற்றுப்படுத்தப்படுவார்‌. உதவியாளரும்‌ தனது தேசிய அடையாள அட்டையை அல்லது வாக்கெடுப்பு நிலையத்தில்‌ ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதேனும்‌ அடையாள அட்டையொன்றை எடுத்துச்‌ செல்லல்‌ அத்தியாவசியமானதாகும்‌.

06. வாக்கெடுப்பு நிலையத்தில்‌ சிரேஷ்ட தலைமை தாங்கும்‌ அலுவலர்‌ வாக்காளரின்‌ தகுதிச்‌ சான்றிதழைப்‌ பெற்றுக்கொண்டு, உடனழைத்து வந்தவரிடம்‌ தகுதிச்‌ சான்றிதழின்‌ ii ஆம்‌ பாகத்தின்‌ கீழ்‌ காணப்படும்‌ உரிய வெளிப்படுத்துகையைப்‌  பெற்றுக்கொள்வார்‌. அதனைத்‌ தொடர்ந்து வாக்கெடுப்பு நிலைய பணியாள்தொகுதி அங்கத்தவரொருவருடன்‌ வாக்காளரும்‌ உதவியாளரும்‌ வாக்களிப்புச்‌ சிற்றறைக்குள்‌ அழைத்துச்‌ செல்லப்பட்டு, சிரேட்ட தலைமை தாங்கும்‌ அலுவலர்‌ மற்றும்‌ பணியாள்தொகுதி அங்கத்தவரின்‌ முன்னிலையில்‌ வாக்குச்சீட்டு அடையாளமிடப்பட்டதும்‌ அதை வாக்குச்சீட்டுப்‌ பெட்டியில்‌ இடச்‌ செய்வார்‌.

07. மேற்கூறப்பட்ட தகுதிச் சான்றிதழொன்று இல்லாமல் வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் சேல்ல முடியாதென்பது வலியுறுத்தப்படுகின்றது. வாக்களித்ததனர் பின்னர் குறிப்பிட்ட தகதிச் சான்றிதழை, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் தன் வசம் வைத்துக் கொள்வார்.

08. எவ்வாறாயினும்‌, உதவியாளரொருவரை உடனழைத்து வரமுடியாத வலிமையிழப்பிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு தேவையாயின்‌ இதற்கு முன்னைய தேர்தல்களின்போது போன்றே மற்றுமோர்‌ அலுவலரின்‌ முன்னிலையில்‌ சிரேட்ட தலைமை தாங்குமு; அலுவலரைக் கொண்டு, தனது வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதென்பதும்‌ அறிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பப்படிவம் - தமிழ்

விண்ணப்பப்படிவம் - ஆங்கிலம்

விண்ணப்பப்படிவம் - சிங்களம்


Add new comment

Or log in with...