மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா?

மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா?-Wearing Face Mask is Not Compulsory During School Time

மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள்

பாடசாலை மாணவர்கள், பாடசாலை வேளையில் முகக்கவசம் அணிந்தவாறு கல்வி கற்பது கட்டாயமாக்கப்படவில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக 113 நாட்களின் பின் இன்று (06) திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 13ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நான்கு கட்டங்களில் திறக்கப்பட்டு வரும் பாடசாலைகள், முதல் கட்டமாக ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்களுக்காக கடந்த ஜூன் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இன்று (06) இரண்டாம் கட்டமாக தரம் 05, க.பொ.த. சாதாரண தரம் (11), க.பொ.த. உயர்தர இரண்டாம் வருட (13) மாணவர்களுக்காக ஆரம்பமானமை குறிப்பிபடத்தக்கது.

அதற்கமைய, பாடசாலைக்கு செல்லும் மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை, சுகாதாரப் பிரிவின் வழிகாட்டலுக்கமைய, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

  • இருமல், சளி, காய்ச்சல் அல்லது வேறு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவா்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மாணவா்களையும் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்.
  • பாடசாலை வேளையில் மாணவா் ஒருவர் சுகவீனமுற்றால், சுகாதார வழிமுறைகளைப் பேணி, உடனடியாக முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்று, முதலுதவிகளைச் செய்வதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பாடசாலை பிரதானி மற்றும் அதிபருக்கு அறிவிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாணவரும், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலையின் அனைத்து பிரிவினரும் கட்டாயம் வீட்டிலிருந்து முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதோடு, பாடசாலை முடிந்து செல்லும்போதும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும். (மேலதிகமாக ஒன்று அல்லது இரண்டு முகக் கவசங்களை கையிருப்பில் வைத்திருப்பதும், மாணவரின் முகக்கவசம் ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்தியிருப்பது சிறப்பு)
  • பொதுப் போக்குவரத்தை இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளவும்.
  • கை கழுவிய பின்னர் பாடசாலைக்குள் நுழைய வேண்டும். (துடைப்பதற்கு பெரிய கைக்குட்டை ஒன்றை வைத்திருப்பது வசதியாக இருக்கும்)
  • பாடசாலைகளின் சிற்றூண்டிச்சாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருப்பதால், தமக்குத் தேவையான உணவு, நீா் போன்றவற்றை வீட்டிலிருந்தே தயார் செய்து கொண்டு வர வேண்டும்.
  • ஒருவரது பொருளை மற்றையவா் பயன்படுத்துவதைத் தவிர்த்தல். (தனக்கு அவசியமான பாடசாலை உபகரணங்கள் அனைத்தையும் மாணவா்கள் கொண்டு வர வேண்டும்)
  • சமூக இடைவெளியை எப்போதும் பேணுதல். (கூடி இருந்து கதைத்தல், சாப்பிடுதல், விளையாடுதல், பயிற்சிகளில் ஈடுபடுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பாடசாலைகளில் மேலதிக வகுப்புகள் இடம்பெறும் போதும் இந்நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.
  • ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பெற்றோர் அழைக்கப்படும் போது, உடனடியாக பாடசாலைக்கு சமுகம் தர வேண்டும்.
  • திருமண வீடுகள், மரண வீடுகள் உள்ளிட்ட அதிகளவானோர் பங்குபற்றும் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு செல்லும் போது மாணவா்கள்  உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவும். (இயலுமான வரை இவ்வாறான பொது நிகழ்வுகளில் மாணவா்கள் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ள பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.

Add new comment

Or log in with...