பொதுஜன பெரமுனவை ஆதரிப்பதே முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுத்தரும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2025 வரை ஆட்சி செய்யப் போகின்றார். ஆகையால் பொதுஜன பெரமுன கட்சியில் சம்மாந்துரை தொகுதியிலே நேரடி வேட்பாளராக போட்டியிடுவதற்கு எனக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை பெரும் வெற்றியாகவே  கருதுகின்றேன் என வேட்பாளார் யூ.எல்.அஸ்பர் தெரிவித்தார்.

சம்மாந்துரை கட்சி காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இந்த ஆசன ஒதுக்கீட்டிலே நாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை எதிர்த்து பெற்றெடுத்துள்ளோம். பொதுஜன பெரமுன கட்சியின் நேரடி வேட்பாளரான என்னை ஆதரிப்பதே அரசை ஆதரிப்பதாக அமையும்.

தேசிய காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிடுகிறது. அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவில்லை. அவர்கள் நிச்சயமாக ஒரு ஆசனத்தையும் பெறமாட்டர்கள். அவர்களை ஆதரிப்பதனால் எந்தப் பயனும் இல்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலையும் அதுவே.  லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிலவேளைகளில் ஒரு ஆசனத்தைப் பெறலாம். அதுவும் நிச்சயம் இல்லை. ஆனால் மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெற்று பொதுஜன பெரமுன வெற்றியீட்டும். இதில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்காளிகளாக இணைந்துகொள்ள வேண்டும். எப்போதும் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிப்பவர்களாக இருக்காமல் மிக நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்கவுள்ள இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்த முன்வரவேண்டும். எமது சமூகம் எதிர்நோக்குகின்ற பல இன்னல்களை தற்போதைய பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதன் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். நமது முஸ்லிம் தலைமைகள் சமூகத்தை பிழையான வழியில் இட்டுச் சென்றதை மக்கள் அறிவீர்கள். கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகம் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விடிவைக் காண்பதற்கான ஒரே தெரிவாக பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதேயாகும்.  இதன்மூலம் இம் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய நல்ல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

பாலமுனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...