தாக்குதலில் ஒருவர் பலி; ஒளிந்திருந்தவர் கைது | தினகரன்


தாக்குதலில் ஒருவர் பலி; ஒளிந்திருந்தவர் கைது

ஹசலக பொலிஸ் பிரிவில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் நேற்று (03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு ஒளிந்திருப்பதாக, ஹசலக பொலிஸ் நிலையத்திற்கு அனாமதேய தொலைபேசி தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய, ஹசலக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது, குறித்த வீட்டு அறையில் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்த ஒருவர் இருந்துள்ளார். அவரை மொரயாய வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தபோது உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளை, உகுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 45 வயதுடைய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


Add new comment

Or log in with...