மூன்றரை மாத காலத்துக்குப் பின்னர் வரும் மாணவர்கள்

அனைத்து ஏற்பாடுகளும் தயார். கற்றல் செயற்பாடுகளை சீராக முன்னெடுக்க அனைவர் ஒத்துழைப்பும் அவசியம்

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக சுமார் மூன்றரை மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலைகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் முதன் முதலாக நாளைமறுதினம் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர்.

பாடசாலைகள் நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள்,போதனைசாரா ஊழியர்கள் ஆகியோரே ஒரு வாரத்துக்கு வருகை தந்தனர்.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தேவைவயான சுகாதார பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து பாடசாலைகளின் சிரமதானம்,உள்ளக வெளிச்சுத்தம் தொடர்பான அறிக்கைகளை பெற்றுச் சென்றுள்ளனர்.ஏதேனும் உதவிகள் தேவைப்படுமிடத்து பொலிஸாருடன் தொடர்புகளை பேணுமாறு அதிபர்களை பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கைகழுவுவதற்கான விசேட ஏற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளதுடன் கொவிட் 19 பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை பாடசாலைக்குள் காட்சிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறு அதிபர்களை கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.அத்துடன் பாடசாலையில் தனிமைப்படுத்தலுக்கான விசேட அறை ஒன்று அமைக்கப்படுவதுடன் தேவையான அளவு முகக்கவசங்களை பாடசாலையில் சேகரித்து வைக்குமாறும் அதிபர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிழக்கில் சில பாடசாலைகளை மீளத்திறப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கவனம் செலுத்தி வரும் அதேவேளை சில அரச பாடசாலைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக காணப்படுவதால் பாடசாலை துப்புரவுப் பணிகளை முன்னெடுப்பதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அதிபர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தேர்தல் காலம் என்பதால் பாடசாலைகளுக்குத் தேவையான சுகாதார உதவிப் பொருட்களை வழங்குவதிலும்,சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதிலும் பிரதேச அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பில் சில விளையாட்டுக் கழகங்களும்,இளைஞர் கழகங்களும் ஈடுபட்டு வருகின்றன.

நாட்டின் சில பிரதேசங்களில் இராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் இராணுவத்தினரால் பெற்றோருக்கு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன் சிரமதானப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தத்தமது கடமைக்குரிய பிரதேசப் பாடசாலைகளுக்கு அடிக்கடி விஜயங்களை மேற்கொண்டு தொற்று நீக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அதேவேளை சில பாடசாலைகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அ லுவலகத்தினால் உரிய ஒத்தாசைகள் வழங்கப்படுவதில்லை என்று அதிபர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாடசாலைகளுக்கு தொற்றுநீக்கி தரும்படி சில அதிபர்கள் முறையான கோரிக்கைகளை விடுத்தும் பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்கள் பாடசாலையிலுள்ள நிதியைப் பயன்படுத்துமாறு அதிபர்களை வேண்டிக் கொண்டு தப்பித்துக் கொள்வதாகவும் அதிபர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே நிதித் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளை மீள நடத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் பாடசாலைகளில் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு போதுமான நிதி இல்லை என அதிபர்கள் தெரிவித்து வருகின்றனர்.பாடசாலைகளுக்கென ஒதுக்கப்பட்ட கொவிட் 19 பாதுகாப்பு நிதி போதாமையே இதற்கான காரணமாகும்.

கொரோனா விடுமுறை காலத்தில் செயலட்டைகள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டதால் பாடசாலை கணக்கில் ஏற்கனவே இருந்து வந்த நிதி ஆரம்ப கல்விப் பாடசாலையில் குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுக்களும்,மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுக்களும் பாடசாலைகளை பார்வையிட்டு வருவதுடன் பிரதான வீதிகளை அண்மித்த பாடசாலைகள் கடமை அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக நடந்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சுமார் மூன்றரை மாத காலமாக மாணவரின் இயல்புக் கற்றல் பாதிப்படைந்திருப்பதை மிகப் பொறுப்பாக கருதி வருகை தரும் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் வேண்டும். அத்தோடு பாடசாலைகள் விடுமுறையில் இருந்ததால் கவின்கலைச் சூழலும் கெட்டுப் போயுள்ளது. வருகை தரும் ஆசிரியர்கள் அதிபர்களோடு இணைந்து பாடசாலை பௌதிக அழகை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு பெற்றோர் கோருகின்றனர்.


Add new comment

Or log in with...