இதுவரை 879 கடற்படையினர் குணமடைவு; 25 பேரே சிகிச்சையில் | தினகரன்


இதுவரை 879 கடற்படையினர் குணமடைவு; 25 பேரே சிகிச்சையில்

- 97% ஆனோர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படையினர் பூரண குணமடைந்து நேற்று (03) வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரை 904 கடற்படையினர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 879 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடற்படை மற்றும் அவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 948 பேர் இதுவரை கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 25 கடற்படையினரே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதற்கமைய 97.23% ஆன கடற்படையினர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஒருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் தெல்தெனிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில், இவர்களது உடலில் மேலும் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரும் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 879ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பினாலும், சுகாதார ஆலோசனைகளுக்கு  அமைய மேலும் 14 நாட்களுக்கு இவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...