தயவு செய்து வன்னியில் இனவாதம் கக்க வேண்டாம்

தயவு செய்து வன்னியில் இனவாதம் கக்க வேண்டாம்-No More Racism In Politics in Vanni-K Kader Masthan

- சக வேட்பாளர்களிடம் காதர் மஸ்தான் கோரிக்கை
- இன, மத பேதமின்றி அபிவிருத்தி செய்பவர்களை உருவாக்குமாறு மக்களுக்கு அழைப்பு

தேர்தல் காலத்தில் அனைத்து பகுதிகளிலும் இனவாதம் கக்கபடுகின்றது. வன்னி மாவட்டத்தில் தயவு செய்து இனவாதத்தை கக்கவேண்டாம் என்று முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (04) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் பின்னணியோ, அனுபவமோ இல்லாமல் அரசியலுக்கு வந்தவனே நான். இறைவனின் உதவியுடன் பல வேலைத்திட்டங்களை இப்பகுதியில் செய்திருக்கின்றேன்.

எதிர்வரும் தேர்தலிற்கு பின்னர் தனிப்பெரும் ஆட்சியை நாம் அமைக்க இருக்கிறோம். எனவே இன, மத பேதமில்லாமல் அபிவிருத்தி செய்யகூடியவர்களை நாங்கள் உருவாக்க வேண்டும்.

தற்போது அனைத்து பகுதிகளிலும் இனவாதம் கக்கப்படுகின்றது. வன்னி மாவட்டத்தில் தயவு செய்து இனவாதத்தை கக்க வேண்டாம் என்று சக வேட்பாளர்களை கேட்டுகொள்கிறேன். எமது மக்கள் இனவாதிகள் அல்ல. ஆனால் தேர்தல் காலங்களில் அரசியலுக்காக அது உருவாக்கப்பட்டு கக்கப்படுகின்றது. அது மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை இன்று உருவாக்குகின்றது.

இனவாதத்தை மாத்திரம் கக்கி வாக்குகளை பெற்று மக்களுக்கு சேவை செய்வதனை விட அரசியலுக்கு வராமல் மக்களை நிம்மதியாக வாழவிடலாம் என்று நான் நினைக்கின்றேன்.

கடந்த தேர்தலின் போது எமது ஜனாதிபதியை இந்த பகுதியை சேர்ந்த 06 பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழ்த் தரமாக விமர்சித்தார்கள். எனினும் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

தற்போது வெற்றி பெற்ற பின்னர் சஜித்தை பிரதமராக்கப் போவதாக இந்த பகுதியில்  அமைச்சராக இருந்தவர் சொல்கிறார். இவர்கள் மக்களை மடையர்களாக நினைக்கிறார்கள். எனினும் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்

இப்பகுதியில் போர் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்தும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பது முற்றுப்பெறாமல் இருக்கின்றது. எனவே இப்பகுதிக்கு ஏற்ற வகையில் பல வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி, அதனை ஐனாதிபதியிடம் வழங்கி அவற்றை செயற்படுத்த நாம் முயற்சிப்போம்.

இங்கு இருக்கும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்திசெய்யப்படும். எமக்கான அபிவிருத்திகளை அரசிலுருந்தே நாம் பெறவேண்டும் என்றார்.

(வவுனியா நிருபர் - பாலநாதன் சதீஸ்)


Add new comment

Or log in with...