ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை; விசாரணை நிறைவு

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை; விசாரணை நிறைவு-2011 WC Match Fixing Allegations-Investigations Concluded-Police

கடந்த 2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினால்  தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

2019 இலக்கம் 24 எனும் விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சட்டத்தின்கீழ், விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள, விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஜூன் 24ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வாவிடம் சுமார் 6 மணி நேர வாக்குமூலமும் (ஜூன் 30), அப்போட்டியில் பங்குபற்றிய கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவிடம் 2 1/2 மணி நேர வாக்குமூலமும் (ஜூலை 01), அவ்வணிக்கு தலைமை தாங்கிய குமார் சங்கக்காரவிடம் நேற்று (02) சுமார் 9 1/2 மணி நேர வாக்குமூலமும்  பதிவு செய்யப்பட்டது.

குறித்த விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அவர்கள், கடந்த மூன்று தினங்களாக வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

அது தவிர பல்வேறு ஆவணங்களை பரிசோதனை செய்து, சாட்சிகள் மற்றும் விசாரணைகளுக்கு அமைய, 2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எவ்வித சான்றுகளும் கண்டறியப்படவில்லை என குறித்த விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய விளையாட்டு குற்றங்கள் தொடர்பான விசேட விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த விசாரணையை நிறைவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு, அது தொடர்பில் இன்றைய தினம் (03) பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக் காட்டினார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், குறித்த கிரிக்கெட் தொடரில் விளையாடி, அத்தொடரின் இறுதிப்போட்டியில் சதத்தை பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன இன்றைய தினம் (03) குறித்த விசாரணைப் பிரிவுக்கு வருமாறு நேற்றைய தினம் (02) அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்கு அவசியமில்லை என மீண்டும் நேற்று இரவு அவரிடம் அறிவித்திருந்தது.

ஆயினும் ஊடகங்களில் தான் தனிப்பட்ட காரணங்களுக்காக சமூகமளிக்க போவதில்லை என தெரிவித்து வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து இன்று (03) காலை குறித்த பிரிவிற்கு சமூகமளித்த மஹேல ஜயவர்தன, குறித்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக, கருத்து வெளியிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...