ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்

ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்-Mahela Jayawardene Arrived and Return From Sports SIU Without Giving Statement

வாக்குமூலம் வழங்குவதற்காக, விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பொலிஸ் பிரிவிற்கு வந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன  வாக்குமூலம் வழங்காது அங்கிருந்து சென்றுள்ளார்.

இன்று (03) காலை 9.00 மணியளவில் அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் இன்று விசாரணைகள் இடம்பெறாது எனவும், மற்றொரு தினத்தில் அவரை அழைக்கவுள்ளதாகவும், விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று சமூகமளிக்குமாறு, மஹேல ஜயவர்தனவுக்கு நேற்று (02) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க, தனக்கு மற்றுமொரு தினம் வழங்குவதாக நேற்றிரவு (02) 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆயினும், தான் தனிப்பட்ட காரணங்களால் சமூகமளிக்கமாட்டேன் என அறிவித்திருந்ததாக, இன்று (03) காலை ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

குறித்த பிரிவுக்கு இன்று (03) காலை சமூகமளித்திருந்த மஹேல இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனவே, இது தொடர்பில் ஏதேனுமொரு வகையில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால், தான் விசேட விசாரணைப் பிரிவுக்கும் அறிவித்து விட்டு இங்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிப்பவன் எனும் வகையிலும், அதற்கு கௌரவமளிப்பவன் எனும் வகையிலும், குறித்த பிரிவுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தான் தெரிவிக்காத கருத்துகளை, தெரிவித்ததாக பிழையான விதத்தில் ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நாம் கௌவரமாக நினைக்கும் இவ்விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் விளையாடும் பொருட்டு கொண்டு செல்வது தனது பொறுப்பாகும் என்பதோடு, அதற்கான பின்புலத்தை ஏற்படுத்துவதுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணையாளர்களுக்கு முடியுமான அளவு ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும், அவர்கள் சிறந்த சேவையை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹேல ஜயவர்தன, நாம் அதனை விசாரணைகளின் முடிவில் பார்க்கலாம் எனத் தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த ஜூன் மாதம் எழுப்பிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய வரவழைக்கப்பட்ட நான்காவது இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன ஆவார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதற்கு முன்னர், அப்போதைய (2011) கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வா (ஜூன் 30) 6 மணி நேர வாக்குமூலமும், உபுல் தரங்க (ஜூலை 01) 2 1/2 மணி நேர வாக்குமூலமும், குமார் சங்கக்கார (02) 9 1/2 மணி நேர வாக்குமூலமும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...