கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு | தினகரன்

கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு

கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு-Committee to Look Into Concerns Connected with Development of JCT & ECT Terminals of Colombo Port

- 45 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
- குழுவுக்கு 8 பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சிக்கலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

துறைமுகம் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னே குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே.மாப்பா பத்திரன, வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியு..ஆர் பிரேமசிறி, மின்சாரம் மற்றும் கணிய வள அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் ஆர்.எம்.தயா ரத்னாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர்.

குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்

  1. ஜய கொள்கலன் முனையத்திற்குரிய மீள்கட்டுமான செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்தல்.
  2. இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய ஜய கொள்கலன் முனையத்தின் ஆழ்கடல் நங்கூரம் இடலின் இயலுமையை அதிகரித்தல் மற்றும் நவீன மயப்படுத்தல் தொடர்பான அமைச்சரவை தீர்மானங்கள் மற்றும் 2017 ஜூலை 26ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக நிதி அமைச்சர் மேற்கொண்ட கண்காணிப்புக்கமைய நடைபெறுகின்றதா என பரீட்சித்தல்.
  3. இயந்திரங்களை கொண்டு வருவதற்கு முன்னர் ஜய கொள்கலன் முனையத்தை ஏன் அபிவிருத்தி செய்யவில்லை என்பதை ஆராய்தல்.
  4. வேண்டுகோள் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட மீள்கட்டுமான செயற்பாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட முதலீட்டு இழப்புகள் மேலும் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன் இயந்திரங்கள் எதற்காக கப்பலில் ஏற்றப்பட்டதென ஆராய்தல்.
  5. இலங்கை அரசு ஏனைய நாடுகளுடன் கொழும்பு துறைமுகம், விசேடமாக கிழக்கு முனையம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான ஆய்வு.
  6. மேலே குறிப்பிட்ட 01, 02 மற்றும் 03வது சந்தர்ப்பங்களில் இலங்கை துறைமுக அதிகார சபை, நிரல் அமைச்சுக்கள் மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நிதி மற்றும் முதலீட்டு இழப்புகள் பற்றிய மீளாய்வு.
  7. மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு யார் பொறுப்பு என்பதை இனங்காணுதல்.
  8. வணிக, கடற்றொழில் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் மூலம் உயர் பயனை பெற்றுக்கொள்ள முடியும் வகையில் மேலே குறிப்பிடப்பட்ட இரு முனையங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை முன்வைத்தல்.

இன்று (03) தொடக்கம் 45 நாட்களுக்குள் குறித்த நிரல் அமைச்சுக்கள் மற்றும் தரப்பினர் தொடர்பாக குழு தமது அறிக்கையை முன்வைக்க வேண்டும். 


Add new comment

Or log in with...