விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையின்றி பொருட்களைப் பெற மீண்டும் வாய்ப்பு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பும் இலங்கையர்கள் விமான நிலையத்தில் சுங்கத்தீர்வையின்றி பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்று காரணமான நாடு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவ்வாறானோருக்கு விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 13 ஆயிரம் இலங்கையர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவிய கொரோனா சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு சுங்கத் தீர்வையற்ற பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான சந்தப்பம் வழங்கப்படவில்லை.  

தற்போது நாளாந்தம் 100 பேர் என்ற ரீதியில் இலங்கைக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு சுங்கத் தீர்வை அற்ற கடைத் தொகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

விமான நிலைய அதிகாரிகள், சுங்கப் பிரிவு, குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.  

ஸ்ரீலங்கன் விமானத்தின் மூலம் வரும் இலங்கையர்கள் தமது தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் விமான பயணச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலையத்தில் இதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இது தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்வரும் தினங்களில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...