கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையை கண்காணிக்க அனைத்துக்கட்சி குழு: சித்தராமையா

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையை கண்காணிக்க அனைத்துக்கட்சி குழு அமைக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதித்தோரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது, சிகிச்சை அளிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன. அதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க அனைத்துக்கட்சி குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க இது அவசியம் தேவை. கொரோனா நிர்வாக பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் சிலர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி உயிரை காப்பாற்றிக் கொள்வதும், ஏழைகள் திசை தெரியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களின் நலனை காப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

கொரோனா நோயாளிகள் ஏற்கனவே மனம் வெறுத்துப்போய் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டினால், அவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடுவார்கள். அதனால் முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டதை நான் வரவேற்கிறேன். மேலும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் காப்பீட்டு வசதியை வழங்க வேண்டும்.


Add new comment

Or log in with...