ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாகியிருந்தால் தமிழருக்கு தீர்வு கிடைத்திருக்கும்

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2005ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் மக்களுக்கு  தீர்வு கிடைத்திருக்கும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தும்பளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் கருத்து  தெரிவித்த அவர்,கடந்த நல்லாட்சி அரசாங்கமானது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியதோடு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஊடாக அபிவிருத்தியினை முன்னெடுத்தது. அத்தோடு இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினையும் நல்லாட்சி அரசாங்கமானது வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை பழிவாங்கும் முகமாக இடைநிறுத்தியுள்ள அரசாங்கம் தற்போது ஒரு இலட்சம் இளைஞர்,யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இராணுவத்தினர் தெல்லிப்பளை, மானிப்பாய் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று இளைஞர், யுவதிகளின் சுயவிபரக் கோவையினை சேகரித்து வருகிறார்கள்.  இந்த விடயமானது மிகவும் பாரதூரமான விடயமாக காணப்படுகின்றது. கட்சி பேதமின்றி அனைவருக்கும் அரச வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி கட்சி, பேதமின்றி விகிதாசார அடிப்படையில் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும் எனவும் நிறுத்தப்பட்ட  செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை உடனடியாக வழங்குவதற்குரிய நடவடிக்கையினை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...