சீனாவில் 400,000 பேர் மீது கடும் முடக்கநிலை அமுல் | தினகரன்


சீனாவில் 400,000 பேர் மீது கடும் முடக்கநிலை அமுல்

சீனாவில் சிறிய அளவிலான கொரோனா வைரஸ் குழுமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுமார் 400,000 மக்கள் பாதிக்கும் வகையில் தலைநகர் பீஜிங்கிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் கடுமையான முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகருக்கு அருகில் ஹெபெய் மாகாணத்தில் அன்சின் கவுன்டி பகுதியிலேயே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இந்த நோய்த் தொற்று ஆரம்பித்த நிலையில் அந்நாடு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. எனினும் இரண்டாம் அலைத் தாக்கம் ஒன்றை தவிர்ப்பதற்கு அங்கு கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் அன்சின் கவுன்டி பகுதி முழுமையாக மூடப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் அறிவித்தனர்.

அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவைக்காக ஒரு நாளைக்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீஜிங்கில் அண்மையில் ஏற்பட்ட நோய்த் தொற்றுடன் தொடர்புபட்டு இந்தப் பிராந்தியத்தில் 18 சம்பவங்கள் பதிவானதை அடுத்தே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...