சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே கோலியின் பலம் - விக்ரம் ரதோர்

சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே விராட் கோலியின் பலம் என்று இந்திய துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரதோர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான விக்ரம் ரதோர் ‘பேஸ்புக்’ மூலம் நடந்த உரையாடலின் போது கூறியதாவது:-

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி குறித்த வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், ஆட்டத்தின் மீது அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு தான். உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கிறார். நான் பார்த்தமட்டில், மிக கடினமான உழைக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் அவர் தான்.

அதுமட்டுமின்றி சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது ஆட்டபாணியை விரைவில் மாற்றிக்கொள்வது அவரது மிகப்பெரிய பலமாகும். அவர் ஒரே மாதிரியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. அணியின் தேவைக்கு தக்கபடி தனது துடுப்பாட்டத்தை மாற்றிக்கொள்வார். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி என்று ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் வெவ்வேறு விதமான ஆட்டங்களை வெளிப்படுத்தக்கூடியவர்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 4 சதங்களுடன் 40 சிக்சர்களை அடித்து நொறுக்கினார். அப்போது அவர் சூப்பர் பார்மில் இருந்தார். அந்த ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய அணி மேற்கிந்திய தீவுக்கு சென்று விளையாடியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 மாதங்கள் அதிரடி ஜாலம் காட்டிய அவர் அதன் பிறகு நடந்த மேற்கிந்திய தீவு தொடரில் முதல் டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்தார்.

ஆனால் இதில் ஆச்சரியமான ஒன்று, ஒரு பந்தை கூட அவர் சிக்சருக்கு தூக்கியடிக்கவில்லை. இது போன்று வெவ்வேறு வடிவிலான போட்டிகளில் ஆடும் போது துடுப்பாட்ட அணுகுமுறையை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது எல்லோராலும் செய்ய முடியாது. அது தான் அவரது பலம்.


Add new comment

Or log in with...