யுத்தத்தை தொடர விடாமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்துள்ளேன் | தினகரன்

யுத்தத்தை தொடர விடாமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்துள்ளேன்

'நாவிதன்வெளியில் நான் கூறியவற்றை சர்ச்சைக்கு  உரியதாக்கியவர்கள் ஆளும் கட்சியை சிக்கலுக்குள்ளாக்குவற்கான நோக்கம் கொண்டவர்களாவர். அவ்வாறான நடவடிக்கையாகவே இந்த பரபரப்பை என்னால் பார்க்க முடிகின்றது. எனக்கும் ஆளும்  கட்சியினருக்கும் உள்ள உறவிற்குள் விரிசலை ஏற்படுத்துவதற்கான  சதியாகக் கூட இருக்கலாம் என்றுதான் நான் கருதுகின்றேன்'

'மக்கள் இன்று சமாதானமாக  வாழ்வதற்கு காரணமானவர்களில்  நானும் ஒருவன்' என்கிறார் கருணா அம்மான்

யுத்தம் தொடராமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்திருக்கின்றேன். இது தொடர்பில் எவருமே கண்டுகொள்வதாக இல்லை. நாட்டில் இன்று சமாதானமாக மக்கள் வாழ்கின்றனர் என்றால் அதற்கு நானும்தான் காரணம்' என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். தினகரனுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி: அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நிகழ்ச்சி நிரலிலேயே நீங்கள் களமிறங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைவேட்பாளர் விமர்சிக்கின்றாரே?

பதில்: கவிந்திரன் கோடீஸ்வரன் இம்முறை வாக்குப் பலம் இல்லாதவர். அவருடைய கேள்விக்கான பதிலை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியவன் நானே. இவர்கள் எல்லோரும் நான் போட்டுக் கொடுத்த மேடையில் நின்று எனக்கு எதிராக விமர்சனங்கள் செய்வதற்கு என்ன அருகதையுள்ளது? நான் வேறுமனே தேர்தல் காலங்களில் வெள்ளை வேட்டியை கட்டிக் கொண்டு 'நான்தான் தழிழன்' என்று தேர்தல் காலத்தில் வெறும் வார்த்தை பேசுபவன் அல்லன்.நான் கூவித் திரிகின்ற சேவல் அல்ல. எலும்பினாலும் தசையினாலும் இரத்தம் சிந்தி தமிழ் மக்களுக்காகப் போராடியவன் என்ற முறையில் வடக்கு, கிழக்கில் எங்கும் எனக்கு வரவேற்பு உள்ளது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர்.

ேகள்வி: நாவிதன்வெளியில் நீங்கள் கூறிய கருத்து தென்னிலங்கையில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. அந்தக் கருத்து உங்களை விசாரணை செய்யுமளவிற்குச் சென்றிருக்கின்றது. அத்துடன் நீங்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றதே?

பதில்: நாவிதன்வெளியில் நான் கூறியவற்றை சர்ச்சைக்கு உரியதாக்கியவர்கள் ஆளும் கட்சியை சிக்கலுக்குள்ளாக்குவற்கான நோக்கம் கொண்டவர்களாவர். அவ்வாறான நடவடிக்கையாகவே இந்த பரபரப்பை என்னால் பார்க்க முடிகின்றது. எனக்கும் ஆளும் கட்சியினருக்கும் உள்ள உறவிற்குள் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதியாக கூட இருக்கலாம் என்றுதான் நான் கருதுகின்றேன். அரசியல் மேடைகளில் உரையாற்றுவது பெரிதுபடுத்தப்படுவது ஒர் ஆரோக்கியமான விடயமாகாது.

கேள்வி: அண்மைக் காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் தேர்தல் காலத்தில் விடுதலைப் புலிகளை பிரசாரப் பொருளாக பயன்படுத்த விளைவதாகத் தெரிகின்றதே?

பதில்: தேர்தல் கால மேடைகளில் பலதையும் கதைக்கின்ற காலம்தான் இது. அவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து பழி தீர்க்கின்ற எண்ணம் கொண்டவர்களை நாம் மாற்றியமைக்க முடியாது. நாம்தான் மாறிக் கொள்ள வேண்டும்.

கேள்வி: சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல மனித உரிமைஅமைப்புகள் யுத்தக் குற்றம் தொடர்பில் நீங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகங்களைச் சேர்ந்தோரும் ஆர்வலர்களும் பல குற்றச்சாட்டுகளை என் பக்கம் முன்வைக்கின்றனர். இதனை எதிர்த் தரப்பினர் பக்கமும் சுமத்த வேண்டும். நான் மாத்திரம் போராட்டத்தை நடத்தியவன் அல்லன். நானும் ஒருவன் என்ற வகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீது குற்றச்சாட்டைத் திணிக்கின்றனர். ஏன் யுத்தகாலத்தில் இழப்புக்கள் இடம்பெறவில்லையா? எல்லாப் பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டன என்பதுதான் உண்மை. தொடர்ந்து யுத்தம் இடம்பெறாமல் எத்தனையோ உயிர்களைப் பாதுகாத்திருக்கின்றேன். இது தொடர்பில் எவருமே கண்டுகொள்வதாக இல்லை. நாட்டில் இன்று சமாதானமாக மக்கள் வாழ்கின்றனர் என்றால் அதற்கு நான்தான் காரணம். இன்று வடக்கு, கிழக்கில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வாகனங்கள் கடனுக்கு பெறப்பட்டு, இலங்கையில் இரவு பகலாக ஓடித் திரிவதற்கான சுதந்திரம் உள்ளது. வங்கிகளில் தேவையான கடன் பெற்று அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டி வியாபாரங்களை அச்சம் இன்றி செய்வதற்கான பூரண சுதந்திரத்தினை பெற்றுக் கொடுத்துள்ளேன். நாட்டின் அபிவிருத்தியினை கட்டியெழுப்பி, வளமான நாட்டிற்கு உதவியிருக்கின்றேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய காலம் முதல் ‘துரோகி’ பட்டத்தை சுமந்து வரும் நீங்கள், தற்போது அவர்களையும் யுத்தக் குற்றவாளிகளாக்கி விட்டதாக விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்: நான் துரோகியாக எப்போதும் இருந்தது இல்லை. நான் யாரையும் காட்டிக் கொடுத்ததும் இல்லை. நான் புலிகள் இயக்கத் தலைவருடனும் எவ்விதத்திலும் முரண்பட்டிருந்ததில்லை. 'என்னால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது. நாங்கள் இப்போரட்டத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்' என்று முடிவெடுத்து நான் ஒதுங்கிக் கொண்டேன். புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட போது, நான் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியது துரோகமென்று யாராவது கருதினால் நான் என்ன செய்வது?

கேள்வி: சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தடன் ஜனாதிபதி,பிரதமர் உங்களுடன் பேச்சுகளைநடத்தியிருந்தார்களா? இல்லை, நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டீர்களா?

பதில்: பொதுஜன பெரமுனவில் நான் அங்கத்துவம் பெறவில்லை. எனவே நான் அதில் இருந்துவிலகிக் கொள்வதற்கு அவசியமில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்நாட்டின் தலைவர்கள் ஆவர். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது போன்று நானும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நாட்டின் தலைவர்கள் என்ற முறையில் அவர்கள் உரையாடுவார்கள். தேவை ஏற்படும் போது நானும்பேசிக் கொள்வேன்.

கேள்வி: தற்போது உங்களுக்கு எதிராக போர்க் கொடிகள் எழுந்துள்ள நிலையில், தேர்தலின் பின்னர் ராஜபக்‌ஷ அணியினருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: நிச்சயமாக, பலமான கட்சியுடன்தான் இணைந்து பணியாற்றுவேன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கினாலும் நான் இன்றைய கொள்கையில் இருந்து மாறப் போவதில்லை. மக்களுக்கான அபிவிருத்தியை தங்குதடையின்றி செய்வதற்கு ஆயத்தமாகவுள்ளேன். எதிர்ப்பு அரசியலோ, சரணாகதி அரசியலோ செய்ய மாட்டேன். உரிமைக்கான குரலாக செயல்படுவேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது விடுதலைப் புலிகள்தான் என்றும் நீங்களே அதற்கு சாட்சியம் என்றும் தாங்கள் கூறுகின்ற போதும், தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைகள் அதனை மறுக்கின்றனவே?

பதில்: உண்மையில் இதற்கான பதிலை முன்பு தந்திருக்கின்றேன். இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதனை ஏற்றிருக்கின்றது? ஆயுதம் தூக்கியது பிழை என்றவர் சுமந்திரன்.பின்னர் தன்னை கொலை செய்ய வந்ததாகக் கூறி முன்னாள் போராளிகளை சிறைக்கு அனுப்பியவர். இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் வலியை உணராதவர்கள் எதைத்தான் ஏற்கப் போகின்றனர்?

 


Add new comment

Or log in with...