கொரோனாவினால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது

அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் சிறிகொத்தவின் அதிகாரத்தைப் பிடிப்பதேயாகும். சிறிகொத்தவின்

அதிகாரத்தைப் பிடிக்கவே முடியாத நிலைமையே சஜித்துக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வேட்பாளர்களும் வெளியேறி வருகின்றார்கள்

 

'கொரோனாவினால் வீழ்ச்சிய டைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தி அரசாங்கத் துக்கு உள்ளது' என்று கூறுகின்றார் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ, மின்சாரம்  மற்றும் மின்வலு அமைச்சர்  மகிந்த அமரவீர.

 

கேள்வி: பல வருடங்கள் ஹம்பாந்தோட்டை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றத்துக்கு சென்ற நீங்கள், பிரபலமான அமைச்சுப் பதவிகளையும் வகித்தீர்கள். இந்தக் காலப் பகுதியில் உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கு நியாயமாக இருந்தீர்கள் என எண்ணுகின்றீர்களா?

பதில்: நான் செய்த அபிவிருத்தித் திட்டங்களை நோக்கினால் நான் எனது மக்களுக்கு நியாயமாக இருந்துள்ளேன் என்பது புரியும். அதனால்தான் அவர்கள் எம்மை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். எமது கடமை அவர்களின் குரலை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்வதாகும். அதேபோல் எமக்கு வாக்குகளை அளித்தவர்கள் அவமானப்படாத வகையில் மக்கள் பிரதிநிதிகளாக கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நான் அதனை நன்றாக செய்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினராக,பிரதி அமைச்சராக, அமைச்சராக மாவட்டம் முழுவதும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நான் செய்துள்ளேன்.

கேள்வி: வாக்களித்த மக்களின் கெளரவத்தை காப்பாற்றினேன் என்று கூறினீர்கள். ஆனால் மக்களின் கருத்து பாராளுமன்றத்தில் 225 பேரும் வேண்டாம் என்பதல்லவா?

பதில்: ஒட்டுமொத்தமாக இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். சஹரான் குண்டு வெடிப்பை செய்த வேளையிலும் 225 பேருக்கும் குண்டை வைத்தால் நல்லது எனக் கூறினார்கள். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தவறுகள் காரணமாகவே அவ்வாறு கூறினார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் இந்தப் பாராளுமன்றத்தில்தான் இருந்தார். அதுரலிய ரத்ன தேரரும் இருந்தார். அதேபோல் நன்றாக வேலை செய்த பலர் இருக்கின்றார்கள். அனைவர் மீதும் குற்றஞ் சாட்டுவது தவறு. சில அணியினர் செய்த தவறால் அனைவர் மீதும் மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். நான் தவறு செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு எனக்குப் பொருந்தாது. பாராளுமன்றத்தில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்களை நீங்கள் கண்டீர்கள். அவ்வேளையில் எனது நடத்தையையும் மக்கள் கண்டார்கள். நான் பாராளுமன்றத்துக்கு வந்து 29 வருடங்களாகி விட்டன. என் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. மக்களின் கௌரவத்தை பாதுகாத்துள்ளேன்.

கேள்வி: உங்களது 29 வருட கால பாராளுமன்ற வழ்க்கையில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சேவை செய்துள்ளீர்கள். ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷவின் நிர்வாகம் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

பதில்: சந்திரிகா குமாரதுங்க அம்மையார், மஹிந்தராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய மூன்று தலைமைகளின் கீழ் நான் பணி புரிந்துள்ளேன். அவர்கள் நாட்டுக்கு சேவை செய்தார்கள். நல்லது போல் குறைகளும் உள்ளன. அந்நியர்கள் 71 வருடங்களாக மாறி மாறி நிர்வாகம் செய்த இந்த நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாமல் போனது. நிர்வாகம் மாறினாலும் நாட்டை ஒரே மாதிரியாகவே ஆண்டார்கள். அரசசேவை, பொருளாதாரம் இவை அனைத்தும் ஒரே மாதிரியே நிர்வாகிக்கப்பட்டு வந்தன. ஜனாதிபதி அதை நன்றாகப் புரிந்து கொண்ட தலைவராவார். மக்கள் சிஸ்டம் மாற்றத்தையே வேண்டினார்கள்.

கேள்வி: கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டின் ஜனாதிபதியான போது நாடு இராணுவ ஆட்சிக்கு செல்லும் என்ற பயத்தை சிலர் ஏற்படுத்தினார்கள். தற்போது அமைச்சு செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத் தலைவர்களாக இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமை தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதல்லவா?

பதில்: நிறுவனமொன்றை சரியான முறையில் நிர்வாகம் செய்ய வேண்டியது அரச தலைவர்களின் பொறுப்பாகும். இராணுவத்தினரா, பொலிஸாரா சிவில் சேவையாளர்களா, மக்கள் பிரதிநிதிகளா என்ற காரணத்தை விட நம்பிக்கை மற்றும் செயல்திறனை ஆராய்ந்து அந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. நியமிக்கப்பட்டவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை நியமிக்கவும் ஜனாதிபதி தயங்க மாட்டார்.

கேள்வி: சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நாட்டை ஆட்சி செய்ய ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கேட்கிறது. இந்த எதிர்பார்ப்பு குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: நகைச்சுவையாகவுள்ளது. சஜித்தினால் பக்கத்தில் கூட வர முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் சிறிகொத்தவின் அதிகாரத்தைப் பிடிப்பதேயாகும். சிறிகொத்தவின் அதிகாரத்தைப் பிடிக்கவே முடியாத நிலைமையே சஜித்துக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வேட்பாளர்களும் வெளியேறி வருகின்றார்கள்.

கேள்வி: கொவிட் 19 தொற்று காரணமாக உலக பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இது இலங்கையை எவ்வாறு பாதிக்கும்?

பதில்: நாம் மாத்திரமல்ல, உலகமே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாம் மக்களுக்குத் தேவையான சலுகைகளை வழங்குவதோடு பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தி அரசாங்கத்திடம் உள்ளது.

கேள்வி: பலரின் வாழ்வாதார வழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எவை?

பதில்: பொருளாதாரத்தை சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகளைப் பற்றி ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

அது பற்றி வங்கி அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். தொழில்களை ஆரம்பிக்க சலுகைகளை வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உதவியளித்து இந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. ஆரம்பத்தில் உதவிகள் அளித்து, கடன் தவணையை தாமதப்படுத்தி, லீஸிங் தவணையை தாமதப்படுத்தினோம். தற்போது முதலீட்டுத்துறை, கைத்தொழில்துறை, உல்லாசப் பயணத்துறை, கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்காகத்தான் 4% வட்டிக்கு கடன் வழங்கும் முறையை கொண்டு வந்துள்ளோம். மக்கள் மேற்கொள்ளும் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தவே உதவி செய்ய வேண்டும்.

கேள்வி: இ.போ.ச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை ஏன் ஏற்பட்டது?

பதில்: கொரோனா நிலைமை காரணமாக மக்களுக்கான போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலப் பகுதியில் இ.போ.சவுக்கு 1700 மில்லியன் நட்டமேற்பட்டது. இதனை இலங்கை போக்குவரத்து சபையால் தாங்குவது சிரமமாகும். 100 டிப்போக்கள் நட்டத்திலேயே இயங்குகின்றன. தற்போது நாம் அதனை 19 இனால் குறைத்துள்ளோம்.

கொரோனா நிலைமை இல்லாவிட்டால் இன்று இலாபம் பெற்றிருப்போம். ஆனால் சம்பளம் வழங்க முடியாத நிலைமை உருவாகவில்லை. நாம் எவ்வாறேனும் சம்பளத்தை வழங்கினோம்.

கேள்வி: கோட்டாபயராஜபக்‌ஷ நாட்டின் ஜனாதிபதியாக்கும் போது மக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்றால் இம்முறை தேர்தலில் மக்களின் பொறுப்பென்ன?

பதில்: ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தவர்கள் போன்று வாக்களிக்காதவர்களும் தற்போது அவர்களுடன் இணைந்துள்ளார்கள்.

யாரும் எதிர்பாராத வகையில் அவர் நாட்டை அபிவிருத்தி செய்கின்றார். கொவிட் 19 தொற்றின் போது எடுத்த முடிவுகள் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளன. அவரிடமிருந்த அனுபவத்தைக் கொண்டு நிலைமையை உரியபடி முகாமைத்துவம் செய்தார். அதேபோன்று நாட்டையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடம் உண்டு.

கேள்வி: ஹம்பாந்தோட்டை மக்களுக்கு இவ்வேளையில் வழங்கவுள்ள செய்தி என்ன?

பதில்: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் மீற மாட்டேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் அவர்களுக்காக ஆஜராகியுள்ளேன்.

அதேபோன்று வாக்களிப்பின் கௌரவத்தையும் அன்று முதல் இன்றுவரை பாதுகாத்துள்ளேன். எதிர்காலத்தில் மக்களின் கௌரவத்தையும் பாதுகாப்பேன் என்னும் உறுதியை நான் வழங்குகின்றேன்.

ஊழல், வன்முறை, அரச சொத்து துஷ்பிரயோகம் என்பன இடம்பெறாத தூய அரசாட்சிக்காக எல்லா அர்ப்பணிப்புக்களையும் செய்வேன். அதே போன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் எஞ்சிய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

 


Add new comment

Or log in with...