2020 பொதுத் தேர்தல்: வாக்கெண்ணும் பணி ஓகஸ்ட் 06 மு.ப. 8.00 மணிக்கு | தினகரன்


2020 பொதுத் தேர்தல்: வாக்கெண்ணும் பணி ஓகஸ்ட் 06 மு.ப. 8.00 மணிக்கு

2020 பொதுத் தேர்தல்: வாக்கெண்ணும் பணி ஓகஸ்ட் 06 மு.ப. 8.00 மணிக்கு-Election Vote Counting On August 06-1st Results at 4pm-Final Results 8pm-Mahinda Deshapriya

- முதல் முடிவு பி.ப. 4.00 மணிக்கு; இறுதி முடிவு இரவு 8.00 மணிக்கு
- தேர்தலில் வாக்களிக்க தகுதி - 1,62,63,889 பேர்
- தபால் மூலம் வாக்களிக்க தகுதி - 705,085 பேர்

- தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு - 47,430
- MOH, PHI, குடும்ப சுகாதார ஊழியர்கள் ஜூலை 13 இல் தபால் வாக்களிப்பு

ஓகஸ்ட் 05ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள எதிர்வரும் பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஓகஸ்ட் 06ஆம் திகதி வியாழக்கிழமை, முற்பகல் 8.00 மணி முதல் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பில், இன்றையதினம் (30) ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளிலும் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் நலன் உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, தேர்தல் இடம்பெறும் தினத்திற்கு அடுத்த நாளே வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் எனும் குறித்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, 2020 பொதுத் தேர்தலின் முதலாவது முடிவை, ஓகஸ்ட் 06ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு அறிவிக்க முடியுமாக இருக்கும் எனவும், தேர்தலின் இறுதி முடிவை ஓகஸ்ட் 06ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும், மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் ஜூலை 11 - 13 வரை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும், அதன் விநியோகம், எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதிக்குள்  நிறைவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாக்காளர் பதிவுக்கு அமைய, இம்முறை ஒரு கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 889 வாக்காளர்கள் (1,62,63,889) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2020 பொதுத் தேர்தலில், 2019ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பின்படியே வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன பீ.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டுகள், இன்று (30) முதல் ஜூலை 02ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளன.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சத்து 5,085 பேர் தகுதி பெற்றுள்ளனர். கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 47,430 பேரின் தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் வாக்களிப்பு ஜூலை 13 - 17 வரை இடம்பெறவுள்ளதோடு, தவறுவோர் ஜூலை 20, 21 இல் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH), சுகாதார பரிசோதகர்கள் (PHI), குடும்ப நல சுகாதார ஊழியர்கள், தமது தபால் வாக்களிப்பை மேற்கொள்ள ஜூலை 13 இல் விசேட தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சுகாதார கெடுபிடி நிலை காணப்படுவதன் காரணமாக, வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...