வாக்காளர் அட்டைகள் ஜூலை 11 முதல் தபாலுக்கு | தினகரன்


வாக்காளர் அட்டைகள் ஜூலை 11 முதல் தபாலுக்கு

- தபால் மூல வாக்குகள் இன்று தபால் திணைக்களத்துக்கு
- ஜூலை 29இல் வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் ஜூலை11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில், தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக,தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் ஜூலை 29ஆம் திகதி நிறைவு செய்யப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள், இன்று (30) முதல் தபாலிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

30ஆம், 01ஆம், 02ஆம் திகதிகளுக்குள் தபால் வாக்குச் சீட்டுகள் தபால் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இத்தபால் மூல வாக்குச் சீட்டுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம், தபால் திணைக்களத்தினால் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம், 15ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளிலும் 20ஆம் 21ஆம் திகதிகளிலும் இடம்பெறும்.

14ஆம், 15ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட முடியாத அரசாங்க ஊழியர்கள், எதிர்வரும் ஜூலை 20ஆம், 21ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சத்து 5,085 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களில், 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யாமை உள்ளிட்ட காரணங்களினால் இவ்விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...