ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ; குழப்பத்தில் சோனியா | தினகரன்


ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ; குழப்பத்தில் சோனியா

இந்திய - சீன எல்லைப் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வருமோ, இல்லையோ; இந்த விஷயத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே, தினமும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

ராகுல், தன் வழக்கமான பாணியில், 'இந்திய எல்லையை சீனாவிற்கு கொடுத்து விட்டார், மோடி' என, 'டுவிட்டரில்' தினந்தோறும் கண்டபடி விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 'பொய் சொல்வதே, ராகுலின் வழக்கம்' என, பா.ஜ., பதிலடி கொடுப்பதோடு நிறுத்தாமல், வேறொரு வேலையையும் செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர், அந்தோணி, பார்லிமென்டில், ஒரு கேள்விக்கு பதில் சொன்னதை, 'வீடியோ'வாக வெளியிட்டுள்ளது. 'பாகிஸ்தானும், சீனாவும் நம் நிலத்தை ஆக்கிரமித்து விட்டன' என, புள்ளி விபரத்தோடு, காங்., அமைச்சர் பேசிய வீடியோ, இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்ல முடியாமல், சோனியா தவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம், சீனாவிலிருந்து காங்கிரசுக்கு கிடைத்த நிதி உதவி தொடர்பான புள்ளி விபரங்களையும், பா.ஜ.,வினர் பட்டியலிட்டு வருகின்றனர். இதை எதிர்கொள்ள முடியாமல், ஏதேதோ ஒப்புக்கு பதில் சொல்லி வருகின்றனர், காங்., தலைவர்கள். 'இப்படி கண்டமேனிக்கு சீனா விவகாரத்தில் பேச வேண்டாம்' என ராகுலுக்கு, சில சீனியர் தலைவர்கள் எடுத்துச் சொன்னார்களாம்.

ஆனால் ராகுலோ, 'மோடிக்கு எதிரான என் நடவடிக்கைகளுக்கு, கட்சி சீனியர் தலைவர்கள் ஆதரவு தர மறுக்கின்றனர்' என, மற்ற சீனியர்களிடம் குற்றம் சாட்டியுள்ளாராம். பிரியங்காவும், சகோதரருக்கு ஆதரவாக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார். 'சீனா விவகாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ...' என, சோனியா குழப்பத்தில் இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.


Add new comment

Or log in with...