அரசாங்கத்துக்கு முழு ஆதரவு வழங்கி உரிமைகள், தேவைகளை பெறுவோம் | தினகரன்


அரசாங்கத்துக்கு முழு ஆதரவு வழங்கி உரிமைகள், தேவைகளை பெறுவோம்

முஸ்லிம் சமூகம் சுயமாக சிந்தித்து  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கினாலே சமூகத்தின் உரிமைகளையும் தேவைகளையும்  நிவர்த்தி செய்து கொள்ள முடியுமென பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.  

களுத்துறை நகர சபை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பு அண்மையில் (26) களுத்துறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களால் ஐ.தே.கவுக்கு அடகுவைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் மீண்டு வெளியே வர வேண்டும். அப்போதுதான் எமது பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். முஸ்லிம் சமூகம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முழுமையான ஆதரவை ஐ.தே.கவுக்கு வழங்கிய போதிலும்   

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் மீதுள்ள நம்பிக்கையால், தேசிய பட்டியல் எம்.பியை எனக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரிக்கும் வழங்க முன்வந்துள்ளார்.  இதன் மூலமாக எமது மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுதான் பிரதமரின்  எதிர்பார்ப்பு. அதற்காக இத்தேர்தலில் முஸ்லிம்கள் ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு பூரண ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.  

எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. 

எமது பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறைகள் மற்றும் இன்னோரன்ன குறைபாடுகள் அதிகளவில் உள்ளன.  இவைகளை நிவர்த்திக்க இத்தேர்தலில் அதிகாரத்தை பெற்றுத்தாருங்கள்.

இதனையும் நாம் தவறவிடுவோமானால் எமது சமூகத்தின் எதிர்காலத்திற்கு நாமே தடையை ஏற்படுத்திய குற்றத்திற்கு ஆளாவோம். இதை சிந்தித்து எமது சமூகம்  இத்தேர்தலில் செயற்பட வேண்டும்.பெரும்பான்மை சமூகங்கள் கூட இன்று ஒற்றுமைப்பட்டுள்ள நிலையில், ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு எமது சமூகமும்ஆதரவு வழங்குவதே காலத்தின் தேவையாகும் என்றார்.

(அஜ்வாத் பாஸி)  


Add new comment

Or log in with...