அதாஉல்லாவை தோற்கடித்து சத்திய அரசியலை ஒழிக்க முயற்சி | தினகரன்


அதாஉல்லாவை தோற்கடித்து சத்திய அரசியலை ஒழிக்க முயற்சி

ஆயிரம் ரூபா அரசியல் முஸ்லிம்களுக்கு ஆபத்து

மக்களின் வறுமையைப் பயன்படுத்தி  வாக்குகளைச் சூறையாட முயல்வதும், பொதிகளை வழங்கி ஏமாற்றுவதும் முஸ்லிம் சமூக அரசியலை மலினப்படுத்தும் செயலென,தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவினர் ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம், பாலமுனை அமைப்பாளர் கே.எல். உபைதுல்லா தலைமையில் (28) நடந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்:

முஸ்லிம் சமூகத்தின் உரிமை,அபிவிருத்தி அரசியல் இன்று வெறும் உணவுப் பொதிகளுக்காக விலை பேசப்படுகிறது.

மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபால் எவ்வளவு பெரிய உயர்ந்த இலட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று திரும்புமிடம், தென்படும் பகுதியெல்லாம் "கிப்லாவாக" (தொழும் திசை) நினைத்துக் கொண்டு செயற்படுகிறது. இது போதாது என்பதற்காக வன்னியிலிருந்து வந்த தலைமையும் எம்மை ஏமாற்ற வந்துள்ளதுதான் இன்றுள்ள கவலை.உணவுப் பொதிகள், வாளிகள் தையல் இயந்திரங்களை வழங்கி எமது மக்களை இவர்கள் ஏமாற்றப் பார்க்கின்றனர்.ஏழைகள் என்பதற்காக எமது தாய்மார்களை இவர்களால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.

ஆயிரம் ரூபா பொதிகளை வழங்கி,கோடி ரூபா பெறுமதியான எமது உரிமைகளையும் பாதுகாப்பையும் இத்தலைமைகள் தொலைத்து விட்டன.இது பெரும் குற்றமாகும்.சத்தியத்தை அழிப்பதற்காக  மயில் கட்சியினர் இன்று ஆயிரம் ரூபாக்களை  வழங்கி வருகின்றனர். நல்லாட்சி அரசின் நாயகர்கள் என மார்பு தடடித் திரிந்த இவர்கள், எமது மக்களின் வாக்குகளை காரணமில்லாமல் இல்லாதொழித்தனர்.அதாஉல்லாவை  இல்லாதொழிக்கவே, தங்கள் அதிகாரங்களை இவர்கள் பாவித்தனர்.அரசியலில் அதாஉல்லாவை ஒழித்து, சத்திய அரசியலை இல்லாமல் செய்யலாம் என இத்தலைவர்கள் கனவு காண்கின்றனர்

கடந்த பாராளுமன்றத்திலே முஸ்லிம் காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் எத்தனை எம்.பிக்கள் இருந்தனர். அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் சாதித்தவைகள் என்ன? அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டே அவர்களால் சாதிக்க முடியவில்லை.

முஸ்லிம் சமூதாயத்திற்கு எதிராகவும், நாட்டினுடைய இறைமைக்கு எதிராகவும், பாராளுமன்றத்திலே எத்தனை முறை கைகளை உயர்த்தினர்.விளையாட்டு அரசியல் செய்யும் முஸ்லிம் தலைமைகளை இத்தேர்தலுடன் வழியனுப்ப வேண்டும் என்றார்.

(பாலமுனை விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...