700 கீ.மீ. தூரத்திற்கு பயணித்த மின்னல் புதிய உலக சாதனை

தெற்கு பிரேசில் வானில் உண்டாகிய 700 கி.மீ. தூரத்துக்கு பயணித்த ஒரே மின்னல் கற்றை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதனை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு பிரேசிலில் இந்த மிக நீண்ட மின்னல் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இந்த மின்னல் பயணித்த தொலைவானது வொஷிங்டன் டி.சி. முதல் பூஸ்டன் நகர் வரையிலான தூரத்துக்கு ஒப்பானது.

அதே நேரம், நீண்ட நேரம் மின்னிய மின்னலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி வடக்கு அர்ஜன்டினாவில் உண்டான மின்னல் 16.73 வினாடிகள் நீடித்து உலகின் மிக நீண்ட நேர மின்னல் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

இவை இரண்டுமே மின்னல்களில் மிக அபாரமான மின்னல்களாகும் என்று அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் ராண்டல் செர்வெனி தெரிவித்துள்ளார்.

பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்ட மின்னல்களைக் கண்டறியும் கருவியின் மூலம் இந்த மிகப்பெரிய மின்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 2007 ஆம் ஆண்டு ஓக்லஹோமாவில் 320 கி.மீ. தூரம் பயணித்த ஒற்றை மின்னல் கற்றைதான் மிக நீண்ட மின்னலாக உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பிரான்ஸில் 2012ஆம் ஆண்டு 7.74 வினாடிகள் நீடித்த மின்னலே உலகின் மிக நீண்ட மின்னலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...