பலமிக்க அரசாங்கத்தை அமைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் | தினகரன்

பலமிக்க அரசாங்கத்தை அமைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்

நாட்டை நல்வழியில் முன்னேற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டத்திற்கு பலம் பொருந்திய அரசாங்கம் அமைவது அவசியமென்பதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் அமோக ஆதரவளிக்க வேண்டுமென கல்வி, விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாத்தறையில்  நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது:

 நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முரண்பாடு ஏற்பட்டதாலே,கடந்த அரசின் செயற்திட்டங்கள் தோல்வியில் முடிந்தன.பாராளுமன்றத்தில் பாலமான ஆட்சி அமைந்தால் மாத்திரமே ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படும்.

இதனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி, பிரதமரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக ஆதரவளிக்குமாறு கோருகிறோம்.உடைந்து விழும் நிலையில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு பல பசப்பு வார்த்தைகளைக் கூறியே அவர்கள் காலங்கடத்தினர்.

வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் மக்களை மறந்து செயற்படும் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து விட்டனர்.எனவே உறவினர்கள், குடும்பத்தவர்கள் நலனை மட்டும் கவனியாது, நாட்டு மக்களின் நலன்,எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் ஜனாதபதி,பிரமரின் கரங்களைப் பலப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எமது  பிள்ளைகளின் நலன் கருதியே, பாதுகாப்பான நாட்டை எமது ஜனாதிபதி உருவாக்கினார்.

அடிப்படைவாதம், பயங்கரவாதத்தை ஒழித்து, அசமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்கியதும் எமது அரசாங்கமே.

மக்களை சந்தித்து எமது கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து, மதத் தலைவர்களுக்கு விளக்கி வருகிறோம். எனவே எமது திட்டங்கள் பற்றி மக்கள் தெளிவு பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தறை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...