கொள்ளையிட்ட மொபைல்; வாங்கியமை தொடர்பில் இரு பெண்கள் கைதாகி பிணை

கொள்ளையிட்ட மொபைல்; வாங்கியமை தொடர்பில் இரு பெண்கள் கைதாகி பிணை-2 Women Arrested for Buying and Selling Theft Mobile Phone-Karaitivu

- கணவனிடமிருந்து பெற்று மற்றுமொரு பெண்ணுக்கு விற்பனை
- விற்பனை செய்தவர் மற்றுமொரு வழக்கில் சிறையில்
- கைதான மனைவி ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டவர்

வீடொன்றில்  கொள்ளையிட்ட தொலைபேசியினை வாங்கி  பயன்படுத்தி வந்த குடும்பப் பெண்கள் இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு பகுதியில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி வீடொன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த  பணம் நகை கைத்தொலைபேசி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பன  கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையிலான குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால் சந்தேகநபர்களினால் குறித்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளானது கடந்த மாதம் ஒலுவில் வயல் பகுதி ஒன்றில் சந்தேகநபர்களினால்  கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால்   மீட்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் ஊடாக  உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் களவாடப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை உரிய முறையில் பெற்று முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்  குறித்த கைத்தொலைபேசியை பயன்படுத்தி வந்த அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் கைதானதோடு, அவர் பயன்படுத்தி வந்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டது.

கைதான பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த கைத்தொலைபேசியை விற்பனை செய்த நபர், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதான வழக்கில் சிறையில் உள்ளமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன், குறித்த தொலைபேசியை தற்போது சிறையிலுள்ள  தனது கணவனிடம் இருந்து கொள்வனவு செய்ய உதவிய மற்றுமொரு குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள்  இருவரும் நேற்று (26) மாலை  கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த இரு  பெண்களுக்கும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணை வழங்கி சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம். றிஸ்வி உத்தரவிட்டார்.

இதில் கைத்தொலைபேசியை கொள்வனவு செய்ய உதவி ஒத்தாசை செய்து  கைதாகிய குடும்ப பெண் தற்போது சிறையில் உள்ள தனது  கணவனிற்கு உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து கடத்தி சென்று வழங்கிய வழக்கில்  குற்றச்சாட்டிற்கு உள்ளாகி  தண்டப்பணம்  விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...