மதத் தலைவர்கள் மீது வீணான களங்கம் விளைவிக்கும் செயல்

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துகள் ஒட்டுமொத்த கத்தோலிக்க மக்களையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளன. அதுமட்டுமல்ல, மதத் தலைவர்கள் அனைவரையும் அரசியல் சகதிக்குள் தள்ளிவிடும் அபத்தமான செயலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஹரினின் இந்தக் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. எந்த ஒரு சமூகமும் இதனை சரியென ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மதங்களையும் மதத் தலைவர்களையும் அவமதிப்பது குறுகிய மனப்பாங்கு ஆகும்.

தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உயர் மதிப்பு கொண்ட மதத் தலைவர்கள் மீது பழி சுமத்துவது தவறான காரியமாகும். பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று சமுதாயத்தை நேரான பாதையில் இட்டுச் செல்வதற்கான அரும்பணியை மேற்கொண்டு வருகின்றார்.

மனித சமூகத்தில் மதங்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் உயரிய இடம் உண்டு. தமது சுயநல நோக்கம் கருதி மதங்களை விமர்சிப்பது பக்குவமானதல்ல. மனிதன் தனது பிறப்பு முதல் மரணம் வரையிலான வாழ்க்கைப் பயணத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமயங்களின் ஆசீர்வாதத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. தத்தமது மத விழுமியங்களைப் பேணி நடக்கும் கடப்பாட்டை ஒவ்வொரு மனிதனும் கொண்டிருக்கின்றான். எந்தவொரு மதத்தின் மீதோ மதத் தலைவர் மீதோ பழி சுமத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

பேராயர் மல்கம் ரஞ்சித் மனித மனங்களை வென்ற மதத் தலைவராக நோக்கப்படுகிறார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் அன்னார் செயற்பட்ட விதம் உன்னதமானதாகும். கத்தோலிக்க மக்களின் வேதனைகளை தணிப்பதிலும், பேரழிவைத் தடுப்பதிலும் அவர் அரும்பாடுபட்டார். அவர் அனைத்து மக்களதும் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார். எந்த ஒரு மதமும் வன்முறையை அனுமதிக்கவில்லை என்பதை மனித மனங்களில் அவர் விதைத்தார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பேராயர் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டதில்லை. அவ்வாறான பெருந்தகை மீது பழி சுமத்தப்படுவதை ஏற்க முடியாது. ஹரீன் பெர்னாண்டோ தமது உரையில் தவறாக குறிப்பிட்டு இருந்தால் அதனை அவர் உடனடியாக திருத்தி இருக்க வேண்டும். விமர்சனங்கள் வந்த பின்னர் வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தம் கிடையாது.

அரசியல் சுயநலனுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலைக்கு யாரும் வந்து விடக் கூடாது. ஹரின் பெர்னாண்டோ அரசியல் மேடையில் கண்டபடி பேசுவதும் பின்னர் அதே மேடையில் தோன்றி வருத்தம் தெரிவிப்பதும் சுயநல அரசியலில் ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது. சரியாகச் சொல்வதாக இருந்தால் ஹரீன் பெர்னாண்டோ நேரடியாக பேராயரிடம் சென்று அவரிடம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும். அதை விடுத்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்துவது ஆரோக்கியமானதல்ல.

மறுபுறம் ஹரினின் செயலை விமர்சிப்பதில் கூட சுயநல அரசியல் புகுந்து விளையாடுகின்றது. இதனை தேர்தலுக்குப் பயன்படுத்தி மேடைகளில் பேசுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முற்படலாகாது. தேர்தல் சமயங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நேர்மையானவை அல்ல. ஜனநாயக அரசியல் அரங்கு கேலிக்கூத்தாக மாறி விடுவதற்கு எவரும் இடமளிக்கலாகாது. ஜனநாயகத்தின் புனிதத்தன்மை, மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுய நலனுக்காக மதங்களையும் மதத் தலைவர்களையும் விமர்சிக்க முற்படுவது அபத்தமான காரியமாகும். அதுவும் புனிதமான பணிகளில் ஈடுபட்டு வரும் ஆன்மிகப் பெரியார்கள் மனங்கள் புண்படுத்தப்படுவதை மனிதப் பண்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் நேர்மையான அரசியல் செய்யட்டும். ஜனநாயகம் வளம் மிக்கது என்பதை நிரூபித்துக் காட்டுவோம். ஜனநாயக அரசியல் மேன்மை மிக்கது என்பதை உத்தரவாதப்படுத்துவோம். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவோம்.


Add new comment

Or log in with...