தப்பிச் செல்ல முற்பட்ட குற்றவாளி துப்பாக்கிச் சூட்டில் பலி

கம்பஹா பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ரன்கொத் பெடிகே  சஞ்ஜீவ சம்பத் என அழைக்கப்படும் கெட்டவல பிட்டிகே சம்பத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) அதிகாலை 5.30மணியளவில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மல்வத்துஹிரிபிட்டிய, ரபர்வத்தை வீதியில், புவக்பிட்டி பிரதேசத்தில் வீதித் தடையொன்றை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்த முற்பட்டுள்ளனர். அதனை மீறி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை, பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் காயமடைந்து, மல்வத்துஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதில் எல்லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 25வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சந்தேகநபர், கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி, ரன்முதுகம கடவத்தை பிரதேசத்தில் 35வயதுடைய பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் என்பதோடு, கணேமுல்ல சஞ்ஜீவவின் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் என்று தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இச்சந்தேகநபர், குற்றங்களை புரியும் குழுக்களில்  துப்பாக்கிச் சூடு நடத்துபவராகவும் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினர் மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...