ஆரோக்கிய வாழ்வுக்கு கைகொடுக்கும் உணவுப் பழக்கங்கள் | தினகரன்

ஆரோக்கிய வாழ்வுக்கு கைகொடுக்கும் உணவுப் பழக்கங்கள்

மனிதனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகப் பிரதானம் உணவாகும். உணவின்றி நாம் உயிர் வாழ முடியாது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் பல்வேறு வகையான உபாதைகள் ஏற்படுகின்றன. சுகாதாரப் பழக்கங்களை கடைப்பிடிக்காமை, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே சிறந்த உணவுப்பழக்கங்களை நாம் கடைப்பிடிப்பதோடு சுகாதாரப்பழக்கங்களை கடைப்பிடிக்கவும் வேண்டும்.

தேவையான அளவு உணவுகளை உட்கொள்ளாததால் நிறைவு குறைவு, குருதிச் சோகை ,வளர்ச்சி குன்றுதல், போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதிக அளவு உணவு உட்கொள்வது (சீனி, உப்பு , தரமற்ற பதனிடப்பட்டஉணவுகள்) காரணமாக அதிக உடல் நிறை, உடல் பருமனடைதல், தொற்றா நோய்கள்(நீரிழிவு இருதய நோய்,புற்றுநோய் சிறுநீரக நோய்கள்) ஏற்படுகின்றன.

தேவையான அளவு மரக்கறி, பழ வகைகளை உட்கொள்ளாமை காரணமாக உயிர்ச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், குறைவான கல்விச் செயல்பாடுகள், பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உணவு வேளைகளைத் தவிர்த்து கொள்வதால் போசாக்கு குறைபாடு,குடற்புண், உடற் செயல்பாடு மந்தமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மனிதன் கடைப்பிடிப்பதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அவசியம் உண்ண வேண்டும்.எனவே நாம்ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாற வேண்டும்.

இவ்வாறு மாறும் போது நாம் உடலாரோக்கியம் உள்ளவர்களாக வாழ முடியும்.

பல்வேறு வகையான உணவுகளை தேவையான அளவுகளில் பரிந்துரைக்கப்பட்ட வகையில் உண்ண வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை நாளாந்தம் நாம் தெரிவு செய்தல் வேண்டும்.நாம் நாளாந்தம் மூன்று பிரதான உணவு வேளைகளில் உணவை உட்கொள்கின்றோம்.

தானியங்கள், கிழங்கு வகைகள் உணவுத் தட்டில் அரைப்பங்கு இருக்க வேண்டும். மரக்கறி வகைகள் உணவுத் தட்டில் ( மிகுதிபாதி 2/3 பங்கு) இருக்க வேண்டும். மீன், அவரை வகைகள், முட்டை, இறைச்சி (பாதி உணவுத் தட்டில் 1/3பங்கு) இருக்க வேண்டும்.

கொழுப்பு எண்ணெய், எண்ணெய் விதைகள் ஓரளவு சேர்க்க வேண்டும்.பழவகைகள் (குறைந்தது ஒரு நாளைக்கு இரு தடவை), பால் உற்பத்திப் பொருட்கள் உணவில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் சிறிதளவு உண்ணுவது சிறந்தது. ஒவ்வொரு உணவு வகையிலும் வெவ்வேறு போசணைப் பொருட்கள் காணப்படுகின்றன. அப்போசணைப் பதார்த்தங்கள் எவை என்பதை நாம் அறிந்து திட்டமிடுதல் வேண்டும்.

கனியுப்புக்கள், விற்றமின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவற்றை வழங்கும் பிரதான உணவு மரக்கறிகளாகும். கங்குன், வல்லாரை, முருங்கையிலை, பசளி, அகத்தி, பொன்னாங்காணி, கரட், பீட்ரூட்,பூசணி,வெண்டிக்காய், கத்தரிக்காய், தக்காளி, வாழைக்காய் போன்றவற்றில் போசணைகள் காணப்படுகின்றன.

விலங்கு உணவுகளான மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் உயர்தரப் புரதச்சத்துள்ளது. இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். கொழுப்பு எண்ணெய் வகைகள் எமது உடல் வளர்ச்சிக்கும் தொழிற்பாட்டிக்கும் அவசியமானதாகும். எனினும் இவற்றின் மேலதிக பாவனையானது தொற்றா நோய்களை ஏற்படுத்தும்.

எண்ணெய்த் தன்மையான வித்துகளில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, விற்றமின்கள், கனியுப்புகள் அடங்கியுள்ளன. இது இதயத்திற்கு நல்லது இவற்றில் நல்ல கொலஸ்ட்ரோல் அடங்கியுள்ளது.

பழங்கள் விற்றமின்கள், கனியுப்புகள், நார்ச்சத்துகளை கொண்டவை. பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களில் காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு, கல்சியம், கனியுப்புக்கள், விற்றமின்கள் உள்ளன. எனவே ஆரோக்கியமான, சமபோசாக்கான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக வாழலாம்.


Add new comment

Or log in with...