முஸ்லிம்களின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கு வித்திட்ட கலாநிதி பதியுதீன் மஹ்மூத்

116 வது பிறந்த தினம் இன்று

கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் 116 வது பிறந்த நாள் இன்றாகும். 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி மாத்தறையில் அவர் பிறந்தார்.

தனது இளம் பராயத்தை மாத்தறையிலும் வெலிகமவிலும் கழித்த இவர், ஆரம்பக் கல்வியை வெலிகமை, மாத்தறை ஆகிய இடங்களில் கற்று பின்னர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கற்றார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்த தலைவர்களில் ஒருவராக பதியுதீன் மஹ்மூத் போற்றப்படுகிறார். தனது உயர் கல்வியை இந்தியாவில் அலிகார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். நாடு திரும்பிய பின்னர் முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளராக இருந்து அதனை கட்டியெழுப்புவதில் அயராது பாடுபட்டார்.

சமூக அரசியல் துறைகளில் தனது இளம் வயதிலேயே ஈடுபடுவதற்கு முஸ்லிம் லீக் அவருக்கு கை கொடுத்தது. 1927இல் அதன் செயலாளராக சுமார் 4 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தினார். சமுதாயப் பிரச்சினைகள் தோன்றும் போது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடி தீர்வு காணும் விதமாக முஸ்லிம்களை மாற்றியமைத்தார் .

படித்தவர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களுக்கும் முஸ்லிம் லீக் உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று உறுதியான கொள்கையுடன் காணப்பட்டார். அது பரந்த இயக்கமாக மாற வேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டார்.

அலிகாரிலிருந்து பட்டதாரியாக நாடு திரும்பிய 1939 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி அகில இலங்கை முஸ்லிம் அரசியல் கல்வி மாநாட்டை கொழும்பில் கூட்டினார்.

“ ஒரு சமூகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதன் பங்கை நிறைவேற்ற வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு உரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படுவது அவசியமாகும்” என்று அங்கு அவர் வலியுறுத்தினார்.

“ நாட்டின் அரசியலிலும் நாம் முக்கியத்துவம் பெறுவது அவசியமானதாகும். அதற்காக விசேட முக்கியத்துவம் அரசியலமைப்பில் எமக்கு கிடைத்தே ஆக வேண்டும். அப்போதுதான் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில் எமது பங்கை உரிய முறையில் நிறைவேற்றி வைக்க முடியும்” என்றார் அவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஏனைய சிலருடன் அமரர் பண்டாரநாயக்கா ஆரம்பித்த போது அவருக்கு பக்கபலமாக நின்று முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அவர் எதிர்த்தார். இலங்கை அரசியலில் சனத்தொகை அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.

பண்டாரநாயக்க ஆட்சியில் டொக்டர் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டொக்டர் பதியுதீன் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக முழு அளவில் பாடுபட்டார். முஸ்லிம்களுக்காக தனியான முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்கினார்.

தேசிய மற்றும் சமூகம்சார் அரசியலுக்கு இவர் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார். 1960களில் கல்வி ஒளிபரப்பு அமைச்சரானார். இலங்கை வானொலியில் முஸ்லிம் பிரிவை உருவாக்கி, முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இலவசக் கல்வியின் பயனை இன மத மொழி பேதமின்றி பலரும் அனுபவிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனியார் பாடசாலைகளை கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தேசிய மயமாக்கி முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்துடன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் களம் இறங்கினார்.

இவ்வாறான புகழ்பூத்த பின்னணியுடன் விளங்கிய பதியுதீன் மஹ்மூத் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி காலமானார். அன்னாரின் சேவைகள் என்றென்றும் மக்கள் மனங்களில் நினைவில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 


There is 1 Comment

Add new comment

Or log in with...