நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலி | தினகரன்

நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலி

மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

வத்தளை, திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற 14 வயதுச் சிறுவன், 16 வயதுச் சிறுமி உட்பட நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோவிட்ட மயானத்திற்கு முன்பாகவுள்ள கடலில் குளிக்கச் சென்றவர்களே, இவ்வனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்று (20)  பிற்பகல் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தின் உறவினர்களான இவர்கள், குறித்த கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இது தொடர்பில் வத்தளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து,  விரைந்து செயற்பட்ட பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பெண்கள் மூவரையும் சிறுவர்கள் இருவரையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் நால்வரும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதில் ஆபத்தான நிலையிலுள்ள மற்றுமொரு பெண் ராகமை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

புபுதுகம, உஸ்வெட்டகெய்யாவ, பதுளை, ஹாலிஎல பிரதேசங்களைச் சேர்ந்த 20, 30 வயதுடைய பெண்கள் இருவரும்,    கந்தானை, கன்தெவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் ஒருவனும், 16 வயது சிறுமி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் வத்தளை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


Add new comment

Or log in with...