கட்டணத்தில் 30 வீத சலுகை மின் துண்டிப்பும் கிடையாது

இறுதி மின்பட்டியலே சரியானது: இரண்டு மாதங்களுக்கு கழிவு

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய மின்சார சபை நடவடிக்ைக

மின்சாரப் பாவனையாளர்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியலே சரியாதெனவும் இரண்டு மாதங்களுக்கு தலா 30 வீத சலுகை வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண பட்டியல் குறித்து சில சிக்கல் நிலைமைகள் நீடிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேள்வியெழுப்பிருந்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் கவனத்துக்கு கொண்டுவந்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று இலங்கை மின்சார சபை விசேட ஊடகச் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இந்த ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்,

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சில சிக்கல் நிலைமைகள் காணப்பட்டன.

இறுதியாக வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணத்துக்கான பட்டியலே சரியானது. மின்சாரப் பாவனையாளர்களுக்கான 30 சதவீத சலுகை அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கங்களுக்கான மின்சாரப் பட்டியல் ஒன்றாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதால் 60 வீத சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தின் பின் வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் வீடுகளில் இருந்ததால் மின்சாரப் வீதம் அதிகரித்துள்ளது. என்றாலும் பெப்வரி மாதம் பெற்றுக் கொண்டிருந்த மின்சாரக் கட்டணப் பட்டியலுக்கு நிகரான அதனைவிட அதிகரிக்காத மின்சாரக் கட்டணப் பட்டியலே பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தை பல தவணைகளில் செலுத்த முடியும். எந்தவொரு வீட்டின் மின்சாரமும் இதனால் துண்டிக்கப்படாது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

நிதி, வணிக நிறுவனங்களின் சட்டவிரோத செயற்பாடுகள்

விசாரணை செய்ய மூவரடங்கிய குழு

நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியூடி.லக்ஷ்மன் குழு ஒன்றை நியமித்துள்ளார்.  ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர இக்குழுவின் தலைவராக செயற்படுவதுடன், இலங்கை மத்திய வங்கியின் சட்டத்துறை பணிப்பாளர் கே.ஜி.பி.சிறிகுமார மற்றும் மத்திய வங்கியின், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் பிரிவின் பணிப்பாளர் ஜே.பி.கம்லத் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பினான்ஸ் மற்றும் லீசிங் வழங்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்களினால் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றபோது இடம்பெறும் சமூகம் அங்கீகரிக்காத செயற்பாடுகள் மற்றும் இவை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன என்பது பற்றியும் கண்டறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு அதன் அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுடன், வங்கித்துறை மற்றும் சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களை தொடர்புகொண்டு இந்த அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி ஆளுநரினால் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...